இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஓய்வுபெற்றார். அவரைத் தொடர்ந்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். அவரின் தலைமையில் இந்திய அணி முதல் தொடராக இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை மிக மோசமாக இழந்தது.

இந்த நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார். கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோதே அவருக்கு நெருக்கமானவர்களை உதவி பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐக்கு நெருக்கடி கொடுப்பதாக பேச்சுக்கள் எழுந்தன. அந்த வகையில் அவருடன் கொல்கத்தா அணியில் பணியாற்றிய மோர்னே மோர்கல் தற்போது பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் நியமனத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, மோர்னே மோர்கல் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார். ஆனால், 2023 உலகக் கோப்பை படுதோல்விக்கு பின் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் மோர்னே மோர்கல். இவர் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடினார். 2018-ல் ஓய்வுபெற்றார். 83 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 44 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சுமார் 12 வருடங்களாக தென்ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்டவர் மோர்னே மோர்கல். வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திலும், பவுன்ஸ் ஆடுகளத்திலும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பதில் மோர்னே மோர்கல் திறமை வாய்ந்தவர். 83 டெஸ்ட் போட்டிகளில் 294 விக்கெட்டுக்களும், 117 ஒருநாள் போட்டிகளில் 188 விக்கெட்டுக்களும், 44 டி20 போட்டிகளில் 47 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE