இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இலங்கை பயிற்சியாளராக இயன் பெல் நியமனம்

By செய்திப்பிரிவு

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த வாரம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு இலங்கை அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் ஆட்டம் வரும் ஆகஸ்ட் 21 முதல் 25-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெறுகிறது. 2-வது போட்டி ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்திலும் கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 6 முதல் 10 வரை தி ஓவல் மைதானத்திலும் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கு இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் இயன் பெல்லை நியமித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். 42 வயதான இயன் பெல், இங்கிலாந்து அணிக்காக 118 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,727 ரன்கள் சேர்த்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியான அஷ்லே டி சில்வா கூறும்போது, “இயன்பெல் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் 3 டெஸ்ட் போட்டிகள்கொண்ட தொடர் முடிவடையும் வரை இலங்கை அணியுடன் இணைந்து பணியாற்றுவார். இங்கிலாந்தில் உள்ள நிலைமைகள் குறித்த முக்கிய தகவல்களைத் தந்து இலங்கை வீரர்களுக்கு உதவி செய்வதற்காக இயன்பெல்லை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளோம். அவருக்கு இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் அதிகம் உள்ளது. இதனால் அவரது யோசனைகள், முக்கியமான இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணிக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE