பாரிஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் 25 பதக்கங்களுக்கு மேல் வெல்வோம்: இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவர் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: பாரிஸ் பாராலிம்பிக்ஸில் 25 பதக்கங்களுக்கு மேல் வெல்வோம் என இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் தேவேந்திர ஜஜாரியா தெரிவித்துள்ளார்.

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகள் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து 84 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இம்முறை வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், சைக்கிளிங், ஜூடோ, பளுதூக்குதல், துப்பாக்கிசுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ் உட்பட 12 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது.

பாராலிம்பிக்ஸில் இந்தியாவில் அதிக அளவிலான வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்வது இதுவே முதன்முறையாகும். 2020-ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியா 19 பதக்கங்கள் வென்றிருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டில் இந்தியா 111 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில் இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் தேவேந்திர ஜஜாரியா கூறும்போது, “பாராலிம்பிக்ஸில் இந்தியாவில் இருந்து பெரிய அளவிலான குழு பங்கேற்பது இதுவே முதன்முறையாகும். ஒட்டுமொத்த செயல்திறன் குறித்து நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இம்முறை 25-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வெல்வது உறுதி. அணியில் உள்ள பெரும்பாலானோர் சிறந்த பார்மில் உள்ளனர். பாரிஸ் போட்டிக்காக கடுமையாக பயிற்சி பெற்றுள்ளனர். குறிப்பாக தடகளம், பாட்மிண்டன், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் சிறப்பான முடிவுகளை எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE