“இந்தியா உடனான டெஸ்ட் தொடரை ஆஸி. வெல்லும்”- ரிக்கி பாண்டிங் கணிப்பு

By செய்திப்பிரிவு

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3-1 என்ற கணக்கில் வெல்லும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். இது குறித்த தகவலை அவர் ஐசிசி உடனான நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

நடப்பு ஆண்டின் இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. நவம்பர் மாத இறுதியில் இரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளன. இதில் வெற்றி பெறுகின்ற அணி அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அதிகரிக்க செய்யும்.

கடந்த 2018-19 மற்றும் 2020-21 என இரண்டு முறையும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா வென்றுள்ளது. இருந்தும் இந்த முறை உள்நாட்டு அணிக்கு தான் வாய்ப்பு அதிகம் என பாண்டிங் தெரிவித்துள்ளார்.

“நிச்சயம் இந்த தொடர் இரு அணிக்கும் சவால் நிறைந்ததாக இருக்கும். ஆனால், இந்தியாவை காட்டிலும் ஆஸி தொடரை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் டிரா ஆகும் போட்டிகளின் எண்ணிக்கை அதிகம் இருக்காது என நான் எதிர்பார்க்கிறேன்.

ஏனெனில், கடந்த இரண்டு முறை நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தான் நடைபெற்றது. அதில் தான் இந்தியா வென்றது. இந்த முறை ஐந்து போட்டிகள் நடைபெறுகிறது. இது அனைவரிடத்திலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் போது நிலவும் வானிலை, டிரா போன்றவற்றை கருத்தில் கொண்டு 3-1 என தொடரை ஆஸ்திரேலியா வெல்லும்.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார். அது அவருக்கு சரியான இடமா என்பதை அவர்கள் தான் முடிவு செய்வார்கள். அந்த இடத்துக்கு அவர் பொருந்தவில்லை என்றால் நிச்சயம் பேக்-அப் வீரரை அங்கு ஆட செய்வார்கள். இந்திய அணியில் இடது கை பந்து வீச்சாளர் இருப்பது அவசியம். ஷமி, சிராஜ், பும்ரா ஆகியோர் அணியில் நிச்சயம் இருப்பார்கள். இப்படி இரண்டு அணிகளும் திறன் கொண்ட வீரர்களை ஆட செய்வார்கள். இந்தியா வலுவான அணியை கொண்டு வரும். இருந்தாலும் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனாக உள்ள ஆஸ்திரேலியாவும் அவ்வளவு எளிதில் ஆட்டத்தை விட்டுக் கொடுக்காது. மொத்தத்தில் இந்த தொடர் சுவாரஸ்யமானதாக இருக்கும்” என பாண்டிங் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE