இந்திய பாரா பாட்மிண்டன் வீரர் பிரமோத் பகத் சஸ்பெண்ட்

By செய்திப்பிரிவு

சென்னை: பாராலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பாட்மிண்டன் வீரர் பிரமோத் பகத், ஊக்க மருந்து கட்டுப்பாட்டு விதிகளை மீறிய காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு (2025) செப்டம்பர் 1-ம் தேதி வரை சுமார் 18 மாத காலம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ள பாரிஸ் பாராலிம்பிக்கில் பங்கேற்க முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார். இதனை செவ்வாய்க்கிழமை (ஆக.13) காலை வெளியான உலக பாட்மிண்டன் கூட்டமைப்பின் அறிக்கை உறுதி செய்துள்ளது.

வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரையில் 11 நாட்கள் பாரிஸில் பாராலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதில் கடந்த முறையை போலவே இந்தியா முத்திரை பதிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. டோக்கியோ பாராலிம்பிக்கில் மட்டும் இந்தியா 19 பதக்கங்களை வென்றிருந்தது. அதில் பிரமோத் பகத்தின் தங்கமும் ஒன்று.

கடந்த 1988-ல் பிரமோத் பகத் பிறந்தார். பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர். ஐந்து வயதில் அவருக்கு ஏற்பட்ட போலியோ பாதிப்பால் இடது கால் பாதிக்கப்பட்டது. 13 வயதில் பாட்மிண்டனில் ஆர்வம் கொண்ட அவர், தொழில்முறை பயிற்சி மேற்கொண்டு அதில் தடம் பதித்தார். டோக்கியோ பாராலிம்பிக்கில் எஸ்எல்3 பிரிவில் அவர் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. உலக சாம்பியன்ஷிப், ஆசிய போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப் போன்றவற்றிலும் பதக்கம் வென்றுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE