மன உளைச்சலால் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் தற்கொலை: மனைவி தகவல்

By செய்திப்பிரிவு

லண்டன்: இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் கடும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

55 வயதாகும் கிரஹாம் தோர்ப் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதியன்று உயிரிழந்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இந்த சூழலில், சில ஆண்டுகளாக கடும் மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்த கிரஹாம் தோர்ப், தற்கொலை செய்துகொண்டதாக தற்போது கிரஹாமின் மனைவி அமாண்டா தோர்ப், தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: “அவரது அன்புக்குரிய மற்றும் அவரை நேசிக்கக்கூடிய மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தும் அவர் சரியாகவில்லை. அண்மைக் காலமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவர் இல்லாமல் போனால்தான் நாங்கள் நன்றாக இருப்போம் என்று அவர் உண்மையிலேயே நம்பத் தொடங்கி இருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக கடும் மன அழுத்தம் மற்றும் உளைச்சலால் அவதிப்பட்டு வந்த கிரஹாம், 2022ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதனால் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு நீண்டநாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நிலை ஏற்பட்டது.

ஒரு குடும்பமாக அவருக்கு எல்லாவகையான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள நாங்கள் முயற்சிகள் எடுத்தோம். ஆனால் அவை எதுவுமே பலனளிக்காமல் போய்விட்டது.” இவ்வாறு அமாண்டா தெரிவித்தார்.

கிரஹாம் தோர்ப், தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் 100 டெஸ்ட் மற்றும் 82 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். 1993 மற்றும் 2005க்கு இடையிலான 13 ஆண்டுகள் அவரது கிரிக்கெட் வாழ்க்கை உச்சத்தில் இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE