வியக்கவைத்த டாம் க்ரூஸ் சாகசம் - பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் அசத்தல்!

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கின் இறுதி நாள் நிகழ்வில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் யாரும் எதிர்பாராத வகையில் ‘ஸ்கை டைவிங்’ மூலம் தோன்றி பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும், அவர் ஒலிம்பிக் கொடியை சுமந்து சென்று லாஸ் ஏஞ்சல் குழுவிடம் ஒப்படைக்கும் மிரட்டலான வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது.

16 நாட்களாக பாரிஸில் நடைபெற்று வந்த ஒலிம்பிக் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதற்கான இறுதி நிகழ்வு அட்டகாசமாக அரங்கேறியது. இதில், அமெரிக்க இசைக் கலைஞர்களான பில்லி ஐலிஷ், ஸ்னூப் டாக், மேலும், பிரபல அமெரிக்க இசைக்குழுவான ‘ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ்’ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது யாருமே எதிர்பாராத வகையில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மைதானத்தில் மேல் கூரையிலிருந்து திடீரென குதித்து சர்ப்ரைஸ் கொடுத்தார். அவரது ஸ்டண்ட் காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

அதன்பிறகு மைதானத்தில் நின்றிருந்த விளையாட்டு வீரர்களுக்கு கைகொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மைதானத்தில் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து ஒலிம்பிக் கொடியை பெற்றுக்கொண்டவர், தன்னுடைய இருசக்கர வாகனத்திலிருந்து வேகமாக மைதானத்திலிருந்து வெளியேறினார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் நடைபெற இருக்கும் இடத்துக்கு கொடியை ஏந்திச் சென்றதை குறிப்பிடும் வகையில் அவர் இவ்வாறு செய்தார்.

ப்ரீ ரெக்கார்ட் வீடியோ ஒன்றும் அங்கு பார்வையாளர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது. அதில் கொடியை ஏந்திச் செல்லும் டாம் குரூஸ், பாரிஸின் ஈஃபிள் டவர் வழியாக சென்று, விமான நிலையத்தை அடைகிறார். தனது பைக்குடன் விமானத்தில் ஏறுகிறார். தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸின் மலைப்பகுதிகளில் ஸ்கை டைவிங் செய்யும் அவர், அங்கிருக்கும் வீரரிடம் ஒலிம்பிக் கொடியை ஒப்படைப்பது போல அந்த காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மைதானத்தில் அவர் எடுத்துக்கொண்ட செல்ஃபியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, “நன்றி பாரிஸ், அடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ்” என பதிவிட்டுள்ளார். அவரது "மிஷன்: இம்பாசிபிள் - ஃபால்அவுட்" திரைப்படம் பாரிஸில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இறுதி நிகழ்வில் வெற்றி பெற்ற அனைத்து விளையாட்டு வீரர்களும் கவுரவிக்கப்பட்டனர். நிறைவு விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மைதானத்தைச் சுற்றி வந்து ரசிகர்களுக்கு பிரியாவிடை கொடுத்தனர். இந்தியா சார்பில் இந்திய தேசியக் கொடியை துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாகரும், ஹாக்கி வீரரான பி.ஆர்.ஸ்ரீஜேஷும் ஏந்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மனுபாகர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார். அதேவேளையில் ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷனில் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் ஆடவர் ஹாக்கியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. ஆடவருக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். ஆடவருக்கான மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். மொத்தம் ஆறு பதக்கங்களுடன் இந்தியா 71-வது இடம் பிடித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE