பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்: கோலாகலமாக நிறைவுற்ற பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவுற்றது.

33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த மாதம் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா அணிவகுப்பு பாரிஸ் நகரில் உள்ள சீன் நதியில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது . படகுகளில் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் அணி வகுத்து உற்சாகமாக வந்தனர். இந்நிலையில், கடந்த 16 நாட்களாக நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகள் நேற்று நிறைவுற்றன.

பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. 40 தங்கம். 44 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 126 பதக்கங்களுடன் அந்த நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2-வது இடத்தை சீனாவும் (40 தங்கம். 27 வெள்ளி, 24 வெண்கலம், மொத்தம் 91 பதக்கங்கள்), 3-வது இடத்தை ஜப்பானும் (20 தங்கம், 12 வெள்ளி. 13 வெண்கலம், மொத்தம் 45 பதக்கங்கள்) பிடித்தன. இந்தியா ஒரு வெள்ளி. 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களைக் கைப்பற்றி 71-வது இடத்தைப் பிடித்தது.

இந்தியாவின் சார்பில் துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை மனு பாகர் பெற்றார்.

அதேவேளையில், ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷனில் ஸ்வப்னில் குசாலே வெண்கலத்தை கைப்பற்றி இருந்தார். ஆடவர் ஹாக்கியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. ஆடவருக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.

ஆடவருக்கான மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தி இருந்தார். இதன் மூலம் இந்தியா சார்பில் இந்த ஒலிம்பிக்கில் மொத்தம் 6 பதக்கங்கள் கிடைத்தன.

போட்டியின் கடைசி நாளான நேற்றைய தினத்திலும் சில போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் முடிவடைந்ததும் இன்று அதிகாலை 12.30 மணிக்கு (இந்திய நேரப்படி) ஒலிம்பிக் போட்டி நிறைவு விழா கோலாகலமாக நடந்தேறியது.

பாரிஸில் உள்ள ஸ்டேட் டீ பிரான்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிறைவு விழாவை 80 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அமர்ந்து கண்டுகளித்தனர். நிறைவு விழாவையொட்டி வீரர், வீராங்கனைகளின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த அணிவகுப்பு விழாவில் இந்திய அணி சார்பில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகர், வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி சென்றனர். இதைத் தொடர்ந்து கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டு இசை, நடன நிகழ்ச்சிகளை நடத்தினர்.

நிறைவு விழாவில் 5 முறை கிராமி விருது வென்ற அமெரிக்க பாடகியான கேப்ரியெல்லா சர்மியெண்டோ வில்சன் என்று அழைக்கப்படும் ஹெச்.இ.ஆர் தேசிய கீதத்தை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். கண்கவர் நிறைவு விழாவில் ஆயிரக்கணக்கான ஆடை பெண் கலைஞர்கள் கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தனர். அக்ரோபாட்ஸ், சர்க்கஸ் நிகழ்ச்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

இதைத் தொடர்ந்து 2028-ல் அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கரென் பாஸ்சிடம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கொடி இறக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

விழாவின் கடைசி நிகழச்சியாக, எரிந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

பதக்கப் பட்டியலில் பிரான்ஸுக்கு 5-வது இடம்: பாரிஸ்: பாரிஸில் நடைபெற்று வந்த 33-வது ஒலிம்பிக் போட்டிகள் நேற்று நிறைவடைந்தன. இந்தப் போட்டியின் முடிவில் போட்டியை நடத்திய பிரான்ஸ் நாடு மொத்தம் 63 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்தது. பிரான்ஸ் நாடு 16 தங்கம், 22 வெள்ளி, 22 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 64 பதக்கங்களைக் கைப்பற்றி 5-வது இடத்தை நிறைவு செய்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE