வினேஷ் போகத் தகுதி நீக்கம் விவகாரத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரித்திருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தீர்ப்பு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். ஆனால், போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற எடை பரிசோதனையில் அவர், 100 கிராம் அதிகமாக இருந்தார். இதனால் வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் உத்தரவிட்டனர். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. அவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததன் மூலம் குறைந்த பட்சம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில், தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். அதில், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். வெள்ளிப் பதக்கத்தை தனக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து வினேஷ் போகத் தரப்பில் வாதாடுவதற்காக முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலான ஹரிஷ் சால்வேயை, இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்துள்ளது.

இதற்கிடையே நடுவர்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு மணி நேரத்துக்குள் தகுதி நீக்கம் பற்றிய முடிவை அறிவிப்பது சாத்தியமில்லை. அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும். வினேஷ் போகத் மேல்முறையீட்டில் அனைத்து தரப்பிடமும் விசாரணை நடத்தப்படும். டாக்டர் அன்னபெல் பென்னட் என்ற நடுவர் விசாரணை நடத்துவார்” என கூறப்பட்டது.

விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) இரவு 9.30 மணியளவில் தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த தீர்ப்பு நாளைய (ஞாயிற்றுக்கிழமை) தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாளை மாலை 6 மணி அளவில் தீர்ப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE