‘வினேஷ் போகத் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது’ - தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர் பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்த நிலையில் இந்த அதிர்ச்சி அரங்கேறியது. இந்தச் சூழலில் அது குறித்து இந்திய தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஜியோ சினிமா மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 நடத்திய மீடியா ரவுண்ட் டேபிள் நிகழ்வில் அவர் கலந்து கொண்டு பேசினார். அதன் விவரம்:

வினேஷ் போகத் தகுதி இழப்பு - பின்னணி என்ன? - “வினேஷ் போகத் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. இதை நாம் ரியோ ஒலிம்பிக்கில் இருந்து சொல்லியாக வேண்டும். அப்போது அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக காலிறுதியில் இருந்து விலகினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தோல்வி. அதன்பின்னர் மிக நீண்ட போராட்டத்தை அவர் மேற்கொண்டார். அதே நேரத்தில் பாரிஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் கடும் சவால் அளிக்கும் போட்டியாளர்களுடன் போட்டியிட்டு இறுதிக்கு முன்னேறினார். அவர் போராட்ட குணம் படைத்தவர். அதன் காரணமாகவே கம்பேக் கொடுத்துக் கொண்டே இருந்தார். குறைந்தபட்சம் வெள்ளி பதக்கம் வெல்வார் என நாடே எதிர்பார்த்த நிலையில் தகுதி இழப்பு என்ற அந்த அதிர்ச்சிகர தகவல் வெளியானது. இதை கடந்து வருவது மிகவும் கடினமானதாக இருக்கும். ஒரு விளையாட்டு வீரராகவும், ஒரு ரசிகனாகவும் நான் ஏமாற்றம் அடைந்தேன். பதக்கத்தை கொண்டு விளையாட்டு வீரர், வீராங்கனையின் திறனை எப்போதும் எடை போட முடியாது” என தேஜஸ்வின் தெரிவித்தார்.

நூலிழையில் இந்திய வீரர்கள் பதக்கத்தை மிஸ் செய்தது குறித்து அவர் கூறும்போது, “இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இருந்தபோதும் சில விளையாட்டு பிரிவுகளில் நான்கு, ஐந்தாம் இடத்தில் நிறைவு செய்தனர். ஒலிம்பிக்கிற்காக முறையாக திட்டமிட்டு, போதுமான அளவு பயிற்சி மேற்கொண்டு, தயாராகவே இருந்தனர். ஆனபோதும் இதில் போட்டி அதிகம் என்பதால் பதக்கம் வெல்வது சவாலான காரியம். அதன் காரணமாகவே நூலிழையில் அதை மிஸ் செய்திருந்தனர். இல்லையென்றால் இந்நேரம் இந்தியாவின் பதக்க கணக்கு நிச்சயம் கூடி இருக்கும்” என்றார்.

தீர்ப்பு எப்போது? - பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். ஆனால் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற எடை பரிசோதனையில் அவர், 100 கிராம் அதிகமாக இருந்தார். இதனால் வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் உத்தரவிட்டனர். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. அவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததன் மூலம் குறைந்த பட்சம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில், தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர்மன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். அதில், தனது தகுதி நீக்கத்தைரத்து செய்ய வேண்டும். வெள்ளிப் பதக்கத்தை தனக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு நடுவர்மன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து வினேஷ் போகத் தரப்பில் வாதாடுவதற்காக முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலான ஹரிஷ் சால்வேயை, இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்துள்ளது.

இதற்கிடையே நடுவர்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு மணி நேரத்துக்குள் தகுதி நீக்கம் பற்றிய முடிவை அறிவிப்பது சாத்தியமில்லை. அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும். வினேஷ் போகத் மேல்முறையீட்டில் அனைத்து தரப்பிடமும் விசாரணை நடத்தப்படும். டாக்டர் அன்னபெல் பென்னட் என்ற நடுவர் விசாரணை நடத்துவார்" என கூறப்பட்டுள்ளது. விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) இரவு 9.30 மணியளவில் தீர்ப்பு வெளியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE