ஒலிம்பிக் மல்யுத்தம் காலிறுதி: இந்தியாவின் ரீதிகா ஹூடா 1-1 என்றபோதும் தோல்வி!

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பெண்களுக்கான 76 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் கிரிகிஸ்தான் வீராங்கனையிடம் 1-1 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை ரீதிகா தோல்வியடைந்தார்.

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பெண்களுக்கான 76 கிலோ எடைப் பிரிவின் தகுதிச் சுற்றில் 12-1 என்ற கணக்கில் ஹங்கேரி வீராங்கனையை வீழ்த்தியை காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் ரீதிகா ஹுடா. இதையடுத்து நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் கிர்கிஸ்தானின் முதல்நிலை வீராங்கனையான ஐபெரி மெடெட் கைசியை இந்திய வீராங்கனை ரீதிகா ஹுடா எதிர்கொண்டார்.

இருவருக்கும் இடையே கடுமையான போட்டியுடன் தொடங்கிய ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் தொடக்கத்திலேயே தடம் பதித்தார் ரீதிகா. தொடர்ந்து விடாப்பிடியாக கிர்கிஸ்தான் வீராங்கனையும் 1 புள்ளிகள் பெற்று 1-1 என்ற சமநிலை அடைந்தார். ஆட்டம் முடியும்போதும் அதே நிலைதான் நீடித்தது. இதனால், செயல்திறன் உள்ளிட்ட நுட்பங்களின் அடிப்படையில், கிர்கிஸ்தான் வீராங்கனை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் இந்திய வீராங்கனை வெண்கலம்ப் பதக்கம் வெல்ல மற்றொரு வாய்ப்பும் உண்டு. அதாவது, சில காலிறுதி போட்டிகளில் ஒருவர் தோல்வியைத் தழுவும்போது, அவர் எதிர்கொண்ட போட்டியாளர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில், தோல்வியடைந்தவருக்கு மற்றொரு வெண்கல பதக்கப் போட்டிக்கான வாய்ப்பு வழங்கப்படுவது மற்றொரு விதி. அந்தச் சுற்றுக்கு ‘ரிபார்ஜ் ரவுண்ட்’ (repechage round) என்று பெயர். அந்த வகையில் காலிறுதியில் வென்ற கிர்கிஸ்தான் வீராங்கனை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில் இந்திய வீராங்கனை ரீதிகா ஹுடாவுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்.

கிர்கிஸ்தான் வீராங்கனைக்கான அரையிறுதிப் போட்டி இன்று இரவு 10.25 மணி அளவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் அவர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் repechage round-ல் இந்திய வீராங்கனை வெண்கலப் போட்டிக்கு களம் காண்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE