“நான் பெண்ணாகப் பிறந்து பெண்ணாகவே வாழ்கிறேன்” - ‘தங்க மங்கை’ இமானே கெலிஃப் @ பாரிஸ்

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பாலின சர்ச்சைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒலிம்பிக் குத்துச்சண்டையில் மகளிர் 66 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் அல்ஜீரியாவின் இமானே கெலிஃப். 25 வயதே ஆன இமானே வெற்றிக்குப் பிந்தைய ஊடகப் பேட்டியில், “எல்லாப் பெண்களைப் போல நானும் ஒரு பெண். நான் பெண்ணாகப் பிறந்தேன். பெண்ணாகவே வாழ்கிறேன். ஆனால் வெற்றியைப் பொறுக்க முடியாத சிலர் இருக்கிறார்கள். அவர்களால் எனது வெற்றியைப் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்த தங்கப் பதக்கம் தான் எனக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட தீவிர பிரச்சாரங்களுக்கான பதில் ” என தான் பாலின சர்ச்சைகளில் சிக்கியதையும் மீறி பெற்ற வெற்றி குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

8 ஆண்டு கால கனவு: மேலும் கெலிஃப் அந்தப் பேட்டியில், இது எனது கனவு. 8 ஆண்டுகளாக இந்தக் கனவு என்னிடமிருந்தது. இப்போது நான் ஒலிம்பிக் சாம்பியன். தங்கப் பதக்கம் வென்றுள்ளேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 8 ஆண்டுகளாக உழைத்தேன். தூக்கமில்லாமல் உழைத்தேன். அந்த கடின உழைப்பால் சேர்வடைந்தேன். இருந்தாலும் உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள். எனது அல்ஜீரிய மக்களுக்கு நன்றி. பாரிஸுக்கு நன்றி.” என்று நெகிழ்ச்சி பொங்க பேசினார்.

ஆதரவாளர்களின் முழக்கம்! முன்னதாக அரங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) கெலிஃப் விளையடியபோது பெரும்பாலான பார்வையாளர்களும் அவருடைய பெயரை உச்சரித்து கெலிஃபை ஊக்கப்படுத்தினர். 3 சுற்றுகள் கொண்ட போட்டியில் உற்சாகமாக விளையாடிய கெலிஃப் சீன வீராங்கனை யாங் லியுவை 5:0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார்.

முதல் அல்ஜீரிய பெண்: பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் தங்கம் வென்றதன் மூலம் அல்ஜீரியா நாட்டின் சார்பில் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இமானே கெலிஃப். அதுபோல் கடந்த 1996 அட்லாண்டா ஒலிம்பிக்ஸ் போட்டிக்குப் பின்னர் அல்ஜீரியா முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சக வீராங்கனையும் பாராட்டு.. கெலிஃபிடம் பதக்கத்தை பறிகொடுத்த சீன வீராங்கனை யாங், நான் கெலிஃபின் வெற்றியால் மகிழ்ச்சியடைகிறேன். நான் அனைவரையும் மதிக்கிறேன். குத்துச்சண்டையைப் பொறுத்தவரை நான் அவரிடமிருந்து நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வேன்” என்று கூறியுள்ளார். இந்தப் போட்டியில் தாய்லந்தின் ஜன்ஜெம் சுவானாபெங், தைவானின் சென் நியன் சின் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

முன்னதாக, இமானே கெலிஃப் பெண் அல்ல என்று சிலர் சர்ச்சையைக் கிளப்பினர். ஆனால் டெஸ்டோடிரான் ஹார்மோன்கள் அதிகமாக இருப்பதாலேயே ஒருவரை பெண் அல்ல என்று கூறிவிட முடியாது என்று இமானே மீதான குற்றச்சாட்டுகள் புறந்தள்ளப்பட்டன.

கெலிஃப் மற்றும் உலக சாம்பியன் பட்டத்தை இருமுறை பெற்ற லின்னும் கடந்த 2023 ஆம் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு (International Boxing Association - IBA) அவர்களைத் தகுதி நீக்கம் செய்தது. அந்த அமைப்பானது பாரிஸ் ஒலிம்பிக்கிலும் இந்த சர்ச்சையைக் கொண்டுவந்தது.

ஆனால், சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ( The International Olympic Committee - IOC) 2016, 2021 ஒலிம்பிக் போட்டிகளில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளையே பாரிஸ் ஒலிம்பிக்கிலும் பின்பற்றுகிறது. முந்தைய இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் குத்துச்சண்டை போட்டி தகுதியாக பாலின சோதனை செய்யப்படாத நிலையில் இந்த முறையும் பாலின சோதனை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் பாலின சோதனை என்பது தேவையற்றது என்று நிபுணர்கள் பலரும் கருத்துகளை முன்வைக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE