காயம் அடைந்துவிடக்கூடாது என்ற சிந்தனை இருந்தது: மனம் திறக்கும் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.இதன் மூலம் ஒலிம்பிக் தடகளத்தில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் நீரஜ் சோப்ரா. டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர், தங்கம் வென்றிருந்தார். மேலும் பி.வி.சிந்து (பாட்மிண்டன்), சுஷில் குமார் (மல்யுத்தம்) ஆகியோருக்குப் பிறகு தொடர்ச்சியாக ஒலிம்பிக்கில் 2-வது முறையாக பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக நீரஜ் சோப்ரா தொடை பகுதியில் காயம் அடைந்திருந்தார். எனினும் அதை சமாளித்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார். வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கூறியதாவது:

ஈட்டியை வீசும்போது, 60-70 சதவீத கவனம் காயம் அடைந்துவிடக்கூடாது என்பதில்தான் இருக்கும். ஏனெனில், நான் காயமடைய விரும்பவில்லை. நான் ஈட்டியை எறியச் செல்லும்போதெல்லாம், எனது வேகம் குறைவாக இருப்பதை பார்க்க முடியும். ஒரு பயிற்சி செஷனில் அதிகபட்சமாக வீரர்கள் 40 முதல் 50 முறை ஈட்டியை எறிவார்கள். ஆனால் காயம் குறித்த பயம் இருப்பதால் ஒரு செஷனை முடிக்க எனக்கு 2 முதல் 3 வாரங்கள் ஆனது.

மருத்துவர் என்னை அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுரை வழங்கினார். ஆனால் உலக சாம்பியன்ஷிப்புக்கு முன் அல்லது உலக சாம்பியன்ஷிப்புக்குப் பிறகு அந்த முடிவை எடுக்க எனக்கு அவ்வளவு நேரம் இல்லை, ஏனெனில் ஒலிம்பிக்குக்குத் தயாராவதற்கு நிறைய நேரம் எடுக்கும். நான் என்னை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறேன். இது விளையாட்டில் நல்லதல்ல. விளையாட்டில் நீண்டகாலம் இருக்க விரும்பினால், அதற்கு பொருத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். ஆனால் முடிவை எடுக்கமுடியாதபடி போட்டிகள் அமைந்தன. இப்போது இந்த விஷயத்தில் நான் ஒரு பெரிய முடிவை எடுக்க வேண்டும். ஈட்டிஎறிதலில் நானும் இன்னும் அதிகதூரம் வீசும் வரை அமைதி கொள்ளமாட்டேன். என்னுள் இன்னும் அதிகம் உள்ளது.நான் அதைசெய்வேன். எதிர்காலத்துக்காக என் மனதை தயார்செய்வேன். உடற்குதியுடன் இருப்பேன்.

இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE