ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார் மனு பாகர்!

By செய்திப்பிரிவு

புது டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனை மனு பாகர் வெள்ளிக்கிழமை ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னதாக, சோனியா காந்தி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாகர் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவு மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி என இரண்டு போட்டிகளிலும் வெண்கலம் வென்றார். இதன்மூலம் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனை படைத்தார் மனு பாகர். கடந்த 7-ம் தேதி தாயகம் திரும்பிய அவருக்கு டெல்லியில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் வெள்ளிக்கிழமை டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார். ராகுல் காந்தியை பார்க்க மனு பாகர் அறைக்குள் நுழைந்தபோது, அங்கிருந்தவர்கள் கைதட்டி அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். மனு பாகரை பார்த்ததும் பூங்கோத்து கொடுத்து ராகுல் வாழ்த்து தெரிவித்தார். அவருடன் பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர். பின்னர் மனு பாகர் மற்றும் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி தன் கையால் இனிப்பு வழங்கி வாழ்த்தினார். இது தொடர்பாக புகைப்படங்களும், வீடியோவும் வெளியாகியுள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் மனு பாகர். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து, ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்திருந்தார். 2 வெண்கல பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மனு பாகர், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஒலிம்பிக் தொடரின் இறுதி நிகழ்வில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். மேலும் அவருடன் இந்திய ஹாக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷும் ஏந்தி செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE