வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் கிட்டுமா? - பாரிஸ் ஒலிம்பிக் முடிவதற்குள் வெளியாகிறது தீர்ப்பு

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டில் பாரிஸ் ஒலிம்பிக் முடிவதற்குள் (ஆக.11) தீர்ப்பு அளிக்கப்படும் என்று விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்த இறுதிப் போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் (CAS- The Court of Arbitration for Sport) வினேஷ் போகத் மேல்முறையீடும் செய்துள்ளார். எனினும், மேல்முறையீடு முடிவு வெளியாகும் முன்னதாக, தனது ஓய்வு முடிவை வினேஷ் போகத் அறிவித்தார்.

இந்த நிலையில், வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டில் பாரிஸ் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள கடிதத்தில், "விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தின் தற்காலிக பிரிவின் நடைமுறை விரைவாக நடந்து வருகிறது. எனினும், ஒரு மணி நேரத்துக்குள் தகுதி நீக்கம் பற்றிய முடிவை அறிவிப்பது சாத்தியமில்லை. அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும்.

வினேஷ் போகத் மேல்முறையீட்டில் அனைத்து தரப்பிடமும் விசாரணை நடத்தப்படும். டாக்டர் அன்னபெல் பென்னட் என்ற நடுவர் விசாரணை நடத்துவார். பாரிஸ் ஒலிம்பிக் முடிவதற்குள் வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டில் தீர்ப்பு அளிக்கப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

CAS என்றால் என்ன? - விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் என்பது விளையாட்டு தொடர்பான முரண்பாடுகளை நடுவர் அல்லது தீர்ப்பாயம் மூலம் தீர்க்க 1984-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு சுயாதீன அமைப்பு ஆகும். இது ஸ்விட்சர்லாந்தின் லோசேன்னில் தலைமையகம் கொண்டுள்ளது. நியூயார்க் மற்றும் சிட்னி ஆகிய நகரங்களில் நீதிமன்றங்களை கொண்டுள்ளது. மேலும், ஒலிம்பிக் நடத்தும் நகரங்களில் தற்காலிக நீதிமன்றங்களை அமைக்கிறது. அந்த வகையில் பாரிஸில் தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த நடுவர் நீதிமன்றத்தில் தான் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்திருக்கிறார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என மேல்முறையீடு செய்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE