கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியது தமிழக அரசு

By கி.கணேஷ்

சென்னை: மக்களவைத் தேர்தலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின்படி, கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. இதையடுத்து, தற்போது மக்களவைத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்தியுள்ளது. இதன் ஒருபகுதியாக, கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க 20 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் உள்ள பகுதியை கண்டறியும் பணி நடைபெற்றது.

அதன்படி, கோவை ஒண்டிப்புதூர், எல் அண்டு டி நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலைக்கழகம் அருகில் உள்ள இடம் மற்றும் சிறை மைதானம் ஆகிய 4 இடங்கள் கண்டறியப்பட்டு, ஆய்வுகள் நடைபெற்றன. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் மைதானம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அந்த இடம் சேலம்-கொச்சி நெடுஞ்சாலையில் இருப்பதால், அப்பகுதியில் மைதானம் அமைப்பது சரியாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, நிலத்தை விளையாட்டுத்துறைக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் இந்தாண்டில் தொடங்கப்படும்” என்று அறிவித்தார். இதையடுத்து, தற்போது அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, ஒப்பந்தம் கோரியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE