ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி 52 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்த ஒலிம்பிக் தொடர்களில் பதக்கம் வென்று சாதனை புரிந்ததன் பின்ன்னணியில் பெரிய அளவில் கடின உழைப்பும், உடல் மன உறுதியும், அரிய மூளை உழைப்பும் உள்ளதை மறுக்க முடியாது. அனைத்துக்கும் மேலாக பி.ஆர்.ஸ்ரீஜேஷ், 'The Great Wall of India'. இவர் மகுடத்துடன் ஓய்வு பெற்றுவிட்டார். இனி இவர் இடத்துக்கு வருபவர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது அத்தனை சுலபமல்ல என்ற ஓர் இடத்தைக் காலியாக விட்டுச் சென்றுள்ளார் அல்லது அவரது நினைவாக விட்டுச் சென்றுள்ளார்.
இது ஹாக்கியில் இந்திய அணியின் 13வது ஒலிம்பிக் பதக்கம், 4வது வெண்கலம். 1968 மெக்சிகோ சிட்டி ஒலிம்பிக்ஸ் மற்றும் 1972 மியூனிக் ஒலிம்பிக்ஸை தொடர்ந்து தற்போது 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ், 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடர்ந்து பதக்கங்களை வென்றுள்ளது இந்திய ஹாக்கி அணி.
இந்த இந்திய ஹாக்கி அணியின் கபில்தேவ் என்று கேப்டன் ஹர்மன் பிரீத்தை வர்ணிப்பது தகும். கபில் தேவ் போன்று மனத்தில் ஆக்ரோஷம், வெற்றிக்கான உந்துதல், ஆனால் வெளியே சர்வசாதாரணமாக, சர்வசகஜமான உடல்மொழியுடன் விளையாடியது இவரை ஹாக்கியின் கபில்தேவ் என்று அழைக்கத் தோன்றுகிறது. நேற்று வெண்கல போட்டியில் அவர் அடித்த இரண்டு ட்ராக் பிளிக் ஷாட்கள் அதியற்புதத்தின் உச்சம். 10 கோல்களை இந்த தொடரில் அவர் அடித்துள்ளார்.
அதேபோல் இந்தியாவின் கோட்டை வாயில் கதவு, எதிரணிகளுக்கு திறவா நெடுங்கதவம் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் கடைசி 15 நிமிட ஆட்டத்தில் மேற்கொண்ட தடுப்புகள் மெய்சிலிர்க்கச் செய்தன. அதுவும் ஒரு ஷாட் கோலை நோக்கி கடும் வேகத்தில் சீறிப்பாய தன் உடலை பந்துக்கு ஒப்புக் கொடுத்து வெளியே அடித்து சேவ் செய்த விதம், இனி இது போன்ற ஒரு லெஜண்ட் கோல் கீப்பர் இந்திய அணிக்குக் கிடைப்பாரா என்ற ஆதங்கத்தை நம்முள் எழுப்பவே செய்திருக்கும். 20 ஆண்டுகால சகாப்தம் நேற்றுடன் ஓய்வு பெற்றது.
» “அவரும் என் பிள்ளையே!” - பாக். வீரரைக் குறிப்பிட்டு நெகிழவைத்த நீரஜ் சோப்ராவின் தாயார்
» பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா எனும் இந்திய தடகளத்தின் தங்க மகன்!
இந்த ஒலிம்பிக்கின் தொடக்கத்தில் இந்திய அணியினர் சற்றே நடுக்கத்துடன் தான் ஆடினர். கொஞ்சம் மந்தமாகவும் டிஃபென்சிவாகவும் ஆடினர். பிறகு ஆக்ரோஷம் அவர்களிடையே புகுந்தது. ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி உண்மையில் அதியற்புதமாக ஆடியது. ஆனால் அந்த பெனால்டி ஸ்ட்ரோக் ஜெர்மனியை வெற்றி பெறச் செய்தது. அது தேவையில்லாத ஒரு பெனால்டி ஸ்ட்ரோக்.
கோல் வாயில் அதை இந்திய வீரர் தடுத்த போது பந்தின் கோணம் கோலுக்கு வெளியே செல்வதாகத்தன் ரீப்ளேயில் தெரிந்தது. அதற்கு பெனால்டி கார்னர் கொடுத்திருக்கலாம். பெனால்டி ஸ்ட்ரோக் இந்திய அணியின் தங்கம் அல்லது வெள்ளி வாய்ப்புக்கு ஆப்பு வைத்தது. ஜெர்மனியுடனான தோல்வி உண்மையில் வேதனையானது. ஏனெனில் இரு அணிகளும் சமமாக பிரமாத ஹாக்கியை ஆடின. மேலும் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஸ்ரீஜேஷின் ஹீராயிக்ஸினால் இந்தியாவிடம் தோற்று வெண்கலத்தைப் பறிகொடுத்ததும் அவர்கள் மனதில் இருந்திருக்க வேண்டும்.
பயிற்சியாளர் கிரெய்க் ஃபுல்டன் இந்த இந்திய அணியுடன் கடுமையாக உழைத்துள்ளார். வெற்றியைத் தவிர வேறு எதையும் மனதில் கொள்ளாத அவரது உறுதி இந்திய அணியினர் மேலும் அப்படியே விழுந்த்து.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு முந்தைய புரோ லீகில் 9 அணிகளில் 7ம் இடத்தில் இந்திய அணி முடிந்தது. அங்கிருந்து ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது ஸ்பெயினை வீழ்த்துவது என்று எழுச்சி பெற்றது. ஒன்றிரண்டு வீரர்களினால் அல்ல ஸ்ரீஜேஷைச் சுற்றி அனைத்து வீரர்களின் எழுச்சியுமாகும். அபிஷேக் என்ற உலகத்தரம் வாய்ந்த ஒரு செண்டர் பார்வர்ட் இந்திய அணிக்குக் கிடைத்துள்ளார்.
இந்திய அணி அதன் உச்சத்தில் இருந்த போது பெனால்டி கார்னர்களை நம்பாமல் பீல்ட் கோல்களையே அதிகம் அடிப்பார்கள். இந்த இந்திய அணி அந்த மட்டத்தில் இன்னும் கொஞ்சம் உயர வேண்டியுள்ளது. அதற்கு அபிஷேக், ஹர்திக் சிங் போன்ற வீரர்கள் நிச்சயம் உதவுவார்கள். இந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஹர்திக் சிங்கின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. தேவைப்பட்டால் பந்தை மின்னல் வேகத்தில் கடைந்து எடுத்துச்சென்று எதிரணியின் டி-யிற்குள் நுழைய வாய்ப்பு ஏற்படுத்துவதும், எதிரணியினரை மடக்குவதும் அவர்கள் ஊடுருவலைத் தடுப்பதும் என ஹர்திக் சிங்கின் பங்களிப்பு அபரிமிதமானது.
குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி ஒலிம்பிக் தொடருக்கு முன்பு டெஸ்ட் போட்டிகளுக்காக சென்ற போது 5-0 என்று தொடரை முற்றிலும் இழந்தது, ஆனால் ஒலிம்பிகில் ஆஸ்திரேலியாவை மண்ணைக் கவ்வச்செய்ததற்குக் காரணம் அபிஷேக்கின் அந்த ஆதார கோல், ஹர்மன்பிரீத்தின் இரட்டை கோல்கள் மற்றும் இவற்றுக்கெல்லாம் பின்னணி காரணங்களாக இருந்த ஹர்திக் சிங்கின் ஆட்டம் என்றால் மிகையாகாது.
ஹர்மன்பிரீத் கடந்த உலகக் கோப்பையின் போது சரியான பார்மில் இல்லை. இந்திய அணி காலிறுதிக்கு முன்னரே வெளியேற்றப்பட்டது. ஆனால் அதன் பிறகு கடின உழைப்பினால் எழுச்சி பெற்றார். ஒரு மேட்சைத் தவிர அனைத்துப் போட்டிகளிலும் ஹர்மன்பீரித் கோல் இல்லாமல் இந்திய ஆட்டம் இல்லை.
ஹர்மன்பிரீத்தின் கோலினால் நியூஸிலாந்துக்கு எதிராக ஆட்டத்தையே காப்பாற்றியது. அர்ஜெண்டினாவுக்கு எதிராக ட்ரா செய்ய வைத்ததும் ஹர்மன்பிரீத்தின் கோல்தான். பிரிட்டனுக்கு எதிராக முன்னிலை கொடுத்து அசத்தியதும் இவர்தான். அயர்லாந்துக்கு எதிராக 2 கோல்களை அடித்து பின்னி எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 கோல்களை அடித்து அதிர்ச்சியளித்தார். ஜெர்மனிக்கு எதிராக முன்னிலை கொடுத்தார். ஸ்பெயினுக்கு எதிராக தனி மனிதராக வென்று கொடுத்துள்ளார்.
இந்தியாவின் பெருமை ஹாக்கிதான். ஹாக்கியில் மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்பியுள்ளமை பழைய உச்சத்திற்குச் செல்வதற்கான தொடக்க இசையாக இந்த ஒலிம்பிக் அமைந்தது. ஆட்டம் முடிந்து இதைத்தான் கேப்டன் ஹர்மன்பிரீத் ‘"hockey is back". என்றார். இதை அவர் சொல்வதன் மூலம் ஹாக்கியை, இந்திய ஹாக்கியை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பது நமக்குப் புரிகிறது.
என்ன! ஒரே கேள்வி ‘இன்னொரு ஸ்ரீஜேஷ் கிடைப்பாரா நமக்கு?’ என்பதுதான். எத்தனை தடுப்புகள். புதையலைக் காத்த பூதம் போல் 20 ஆண்டுகள் அந்த வலையைக் காத்துள்ளார். அவரது நீளும் ஸ்டிக், இருபுறமும் நீளும் கைகள், முன்னேறி வந்து தடுத்தமைகள், நீட்டி நீட்டி எதிரணியினரின் கோல் முயற்சிகளைத் தடுத்த அந்த பேடுடன் கூடிய கால்கள் போன்றவை நம் கண்களின் முன்னால் வந்து போகவே செய்யும்.
இனி வரும் போட்டிகளில் ஸ்ரீஜேஷ் அங்கு இல்லை என்றாலும் நம் மனக்கண் முன் ஸ்ரீஜேஷ்தான் நிற்பார். அப்படிப்பட்ட ஒரு லெஜண்ட் உச்சத்தில் ஓய்வு பெற்றது மகிழ்ச்சியே என்றாலும், இந்திய அணிக்கு அது ஒரு பெரிய வெற்றிடமே. ஸ்ரீஜேஷை இந்திய ஹாக்கி அணியின் பயிற்சி களத்தில் நிச்சயம் பயன்படுத்துமாறு ஒரு முக்கியப் பொறுப்பை அவருக்கு வழங்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago