“அவரும் என் பிள்ளையே!” - பாக். வீரரைக் குறிப்பிட்டு நெகிழவைத்த நீரஜ் சோப்ராவின் தாயார்

By செய்திப்பிரிவு

பானிபட்: “பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நதீமும் என் பிள்ளை தான்” என்று கூறி மகத்தான தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார் வெள்ளி வென்ற இந்திய வீரர் நீராஜ் சோப்ராவின் தாய்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் என்ற ஒலிம்பிக் சாதனைத் தடத்துடன் தங்கம் வென்றார். மிகக் கடினமான இந்தப் போட்டியில், இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா எறிந்த ஈட்டியின் தூரம் 89.45 மீட்டர். இதுவே அவரது ஒலிம்பிக் பெஸ்ட் என்பது கவனிக்கத்தக்கது. 88.54 மீட்டர் தூரம் வீசிய கிரனேடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் வெண்கலம் வென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். அவரது வெற்றியை இந்திய தேசமே கொண்டாடி வருகிறது.

‘அவரும் என் பிள்ளையே..’ இந்நிலையில் நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி அளித்த பேட்டி ஒன்று கவனம் பெற்றுள்ளது. ஊடகப் பேட்டியில் சரோஜ் தேவி, “நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களுக்கு வெள்ளிப் பதக்கமும் தங்கத்துக்கு ஈடானதே. தங்கம் வென்றவரும் என் பிள்ளை தான். நீரஜ் காயமடைந்தார், காயத்துடன் அவர் பெற்றுத்தந்த இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தடகள வீரரின் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தான். எங்களுக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நீரஜ் வரும்போது அவருக்குப் பிடித்த உணவை சமைத்து வைப்பேன்” என்று கூறியுள்ளார்.

நீரஜின் தந்தை சதீஷ் குமார் கூறுகையில், “ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான நாள் என்பது இருக்கும். இன்றைய நாள் பாகிஸ்தானுக்கானது. ஆனால் நாமும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளோம். அது நிச்சயமாக நமக்கு பெருமித தருணம் தான். நீரஜின் காயம் அவருடைய செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியது. நீரஜின் வெற்றி அடுத்த தலைமுறையினருக்கு உத்வேகம் தருவதாக இருக்கும். தேசத்துக்காக நீரஜ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். நாங்கள் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணர்கிறோம். இளைஞர்கள் நிச்சயமாக நீரஜ் வெற்றியால் உத்வேகம் பெறுவார்கள்” என்றார்.

நீரஜின் தாத்தா தரம் சோப்ரா, “நீரஜ் தனது சிறந்த பங்களிப்பை வழங்கி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். தேசத்துக்கு அவர் மேலும் ஒரு பதக்கத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.” என்றார்.

முன்னதாக, பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா விளையாடுவதைக் காணும் வகையில் நீரஜீன் வீட்டருகே பெரிய திரையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நேரலையில் ஒளிபரப்பட்டது. நிறைய பேர் அதனைக் கண்டு ரசித்தனர். ஒலிம்பிக்கில் அவர் வெள்ளி வென்றவுடன் மக்கள் இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து.. குடியரசுத் தலைவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், "பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் நீரஜ் சோப்ரா. அவரால் இந்தியா பெருமை கொள்கிறது. அவரது சாதனை வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும். எதிர்காலத்தில் இந்தியாவுக்காக மேலும் பல பதக்கங்களை, பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுத் தருவார் என இந்தியா எதிர்நோக்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார். அவர் "நீரஜ் சோப்ரா சிறந்த ஆளுமை. மீண்டும் மீண்டும் அவர் தனது திறமையை வெளிப்படுத்துகிறார். ஒலிம்பிக்கில் மீண்டும் அவர் வென்றிருப்பதால் இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது. வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். வரவிருக்கும் எண்ணற்ற தடகள வீரர்கள் அவர்களின் கனவுகளை நனவாக்கவும், நமது தேசத்தை பெருமைப்படுத்தவும் அவர் தொடர்ந்து ஊக்குவிப்பார்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE