பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா எனும் இந்திய தடகளத்தின் தங்க மகன்!

By செய்திப்பிரிவு

பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, தொடர்ச்சியாக அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் என்ற ஒலிம்பிக் சாதனைத் தடத்துடன் தங்கம் வென்றார். மிகக் கடினமான இந்தப் போட்டியில், இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா எறிந்த ஈட்டியின் தூரம் 89.45 மீட்டர். இதுவே அவரது ஒலிம்பிக் பெஸ்ட் என்பது கவனிக்கத்தக்கது. 88.54 மீட்டர் தூரம் வீசிய கிரனேடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் வெண்கலம் வென்றார்.

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி என இந்திய தடகள விளையாட்டில் யாருமே இதுவரை செய்யாத மகத்தான சாதனையாக, அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக பதக்கம் வென்று சரித்திரம் படைத்துள்ள நீரஜ் சோப்ராவை நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். நீரஜின் வெள்ளிப் பதக்கம் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆக கூடியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளிலும், உலக தடகளப் போட்டிகளிலும் பெரிய அளவில் இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை சோபிக்கவில்லை என்பது மிகப் பெரிய குறையாக இருந்தது. விளையாட்டுப் பிரியர்களின் அந்த மாபெரும் மனக்குறையைத் தீர்த்து வைத்தவர் நீரஜ் சோப்ரா. 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று தாயகத்தின் பெருமையை தலைநிமிரச் செய்தார்.

ஹரியாணாவின் பானிப்பட்டில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த நீரஜ், அங்குள்ள பிவிஎன் பள்ளியிலும், சண்டிகரிலுள்ள தயானந்த் ஆங்கிலோ - வேதிக் கல்லூரியில் பட்டப்படிப்பும் படித்தார். இளம் வயதிலேயே ஈட்டி எறிதலில் ஆர்வம் கொண்ட நீரஜ், தன்னை மெருகேற்றிக் கொண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் ஜொலித்தார். இதன்மூலம் இந்திய ராணுவத்தில் அவருக்கு சுபேதார் பணியிடம் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து ஈட்டி எறிதலில் அவர் வெற்றிகளைக் குவித்தார். 2016-ல் நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, உலக ஜூனியர் போட்டியில் தங்கம், தெற்காசிய விளையாட்டில் தங்கம், 2017-ல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், 2018-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம், 2018-ல் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் என வரிசையாக பதக்கங்களை அள்ளிக் குவித்தார்.

2021-ல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கத்தைத் தட்டி வந்தார் நீரஜ். அந்த ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற 7 பதக்கங்களில் ஒரே ஒரு தங்கம் நீரஜ் சோப்ரா வென்றதாகும். ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் தனிநபர் பிரிவில் 2 பேர் மட்டுமே தங்கம் வென்றுள்ளனர். 2008-ல் அபிநவ் பிந்த்ராவும் (துப்பாக்கிச் சுடுதல்), 2021-ல் நீரஜ் சோப்ராவும் (ஈட்டி எறிதல்) இந்தச் சாதனையை செய்துள்ளனர்.

2022-ல் நடைபெற்ற டயமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் தொடரிலும் முதலிடம் பிடித்து அசத்தினார் அவர். இதைத் தொடர்ந்து யூஜின் நகரில் நடைபெற்ற உலக தடகளப் போட்டியில் அவர் வெள்ளியை கைப்பற்றினார்.

2023-ல் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று 88.77 தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2024 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார். அந்தப் போட்டியில் முதலிடம் பெற்று, உலக தடகள சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கத்தையும் வசப்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

அதிக மனோதிடம், இடைவிடாத பயிற்சி, விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற தீராத தாகம், ஊக்கம் அளிக்கும் பயிற்சியாளர்கள் என அவரது வெற்றிக்கு பல பிளஸ் பாயிண்டுகள் உள்ளன.

2020 டோக்கியோ ஒலிம்பிக் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றபோது, அவர் எறிந்த ஈட்டியின் தூரம் 87.58 மீட்டர். இப்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது பெஸ்டை கொடுத்து வெள்ளிப் பதக்கம் வென்று, தொடர்ச்சியாக அடுத்தடுத்த 2 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் என்ற சாதனை படைத்துள்ள நீரஜ் எறிந்த ஈட்டியின் தூரம் 89.45 மீட்டர்.

ஆம், தானே இந்திய தடகளத்தின் அடையாளம் என்பதை மீண்டும் நிரூபித்தார் நீரஜ் சோப்ரா. இந்திய தடகள விளையாட்டுக்கு அவரே தங்க மகன்!

தகவல் உறுதுணை: வா.சங்கர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE