“ஹாக்கி பயணத்தை முடிக்க இதுவே சிறந்த வழி” - பி.ஆர்.ஸ்ரீஜேஷ் உருக்கம் @ ஒலிம்பிக்

By செய்திப்பிரிவு

பாரிஸ்: ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறும் தனது முடிவை மாற்றுவதற்கான வாய்ப்பை நிராகரித்தார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி நேற்று ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. இதன் மூலம் 1972-ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியாக 2-வது முறையாக இந்திய அணி பதக்கம் வென்று சாதனை படைத்தது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு
பெறப்போவதாக பி.ஆர்.ஸ்ரீஜேஷ் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதன்படி அவர், வெண்கலப் பதக்கம் வென்றகையோடு ஓய்வு பெற்றார்.

இதுதொடர்பாக ஸ்ரீஜேஷ் கூறும் போது, “ஒலிம்பிக் போட்டியை பதக்கத்துடன் முடிக்க இதுவே சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன். நாங்கள் வெறுங்கையுடன் வீட்டிற்குச் செல்லவில்லை, அது ஒரு பெரிய விஷயம். நான் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று விரும்பிய மக்களின் உணர்வுகளை மதிக்கிறேன். ஆனால் சில முடிவுகள் கடினமானவை, எனினும் சரியான நேரத்தில் ஒரு முடிவை எடுப்பது சூழ்நிலையை மிகவும் அழகாக்குகிறது. இதனால் நான் ஓய்வு முடிவில் தொடர்கிறேன். இதை மாற்றிக்கொள்ள மாட்டேன்” என்றார்.

இந்திய ஹாக்கி அணியின் பெருஞ்சுவர் என அழைக்கப்பட்டு வந்த 36 வயதான ஸ்ரீஜேஷ் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் அவர், முக்கிய பங்கு வகித்திருந்தார். அவரது 18 வருட ஹாக்கிவாழ்க்கையானது ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக 2-வது முறையாக பதக்கம் வென்ற மகிழ்ச்சியுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்திய அணிக்காக ஸ்ரீஜேஷ் 300-க்கும் அதிகமான ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.

பிரதமர் பாராட்டு: பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், தனது எக்ஸ் வலைதள பதிவில், “வருங்கால சந்ததியினரும் போற்றிப் பாதுகாக்கும் சாதனை. ஒலிம்பிக்கில் ஜொலித்த இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இரண்டாவது பதக்கம் என்பதால் இது இன்னும் சிறப்பு வாய்ந்தது.

அவர்களின் வெற்றி திறமை, விடாமுயற்சி மற்றும் குழு உணர்வின் வெற்றியாகும். அவர்கள் மிகுந்த மன உறுதியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். வீரர்களுக்கு வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியருக்கும் ஹாக்கியுடன் உணர்வுப்பூர்வமான தொடர்பு உள்ளது, இந்த சாதனை நமது நாட்டின் இளைஞர்களிடையே ஹாக்கி விளையாட்டை மேலும் பிரபலமாக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE