அன்ஷு மாலிக் ஏமாற்றம் முதல் ஜோதி யார்ராஜி வெளியேற்றம் வரை | இந்தியா @ ஒலிம்பிக்

By செய்திப்பிரிவு

பதக்கத்தை தவறவிட்டார் மீராபாய் சானு: மகளிருக்கான பளுதூக்குதலில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு 199 கிலோ (ஸ்னாட்ச்சில் 88 கிலோ கிளீன் அன்ட் ஜெர்க்கில் 111 கிலோ) எடையை தூக்கி 4-வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். டோக்கியோ ஒலிம்பிக்கில் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த மீராபாய் சானு மீது இம்முறை அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் அவர், இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கைவிட 3 கிலோ எடையை குறைவாகவே தூக்கினார். 6 முயற்சிகளில் மீராபாய் சானுவால் 3 முறை மட்டுமே எடையை தூக்க முடிந்தது. முன்னாள் உலக சாம்பியனான அவர், ஸ்னாட்ச் போட்டிக்குப் பிறகு பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பில் இருந்தார். ஆனால், அவர் தனது கடைசி க்ளீன் அன்ட் ஜெர்க் முயற்சியில் 114 கிலோ எடையை தூக்கத் தவறினார். இதனால் அவர், பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

சீனாவின் ஹௌ சீஹுய் 206 கிலோ எடையை (89 117) தூக்கி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர், தங்கப் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்டார். டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர், தங்கம் வென்றிருந்தார். ருமேனியாவின் மிஹேலா காம்பேய் 205 கிலோ எடையை தூக்கி (93 112) வெள்ளிப் பதக்கமும், தாய்லாந்தின் சுரோத்சனா கம்பாவோ 200 கிலோ எடையை தூக்கி (88 112) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். மீராபாய் சானு தனது கடைசிமுயற்சியில் 114 கிலோ எடையை தூக்கியிருந்தால் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியிருக்கலாம். ஆனால் கடைசி முயற்சியை அவர் வெற்றிகரமாக முடிக்கத் தவறினார்.

அன்ஷு மாலிக் ஏமாற்றம்: மகளிருக்கான மல்யுத்தத்தில் 57 கிலோ எடைப் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அன்ஷு மாலிக், அமெரிக்காவின் ஹெலன் லூயிஸ் மரோலிஸுடன் மோதினார். இதில் டிபன்ஸில் வலுவில்லாமல் செயல்பட்ட அன்ஷு மாலிக் 2-7 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.

ஜோதி யார்ராஜி வெளியேற்றம்: மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஹீட்ஸில் இந்தியாவின் ஜோதி யார்ராஜி பந்தய தூரத்தை 13.16 விநாடிகளில் கடந்து 4-வது இடம் பிடித்து அரை இறுதி சுற்றுக்கு நேரடியாக முன்னேறும் வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் மற்றொரு வாய்ப்பாக நேற்று நடைபெற்ற ரெப்பேஜேஜ் ஹீட்ஸ் பிரிவில் ஜோதி யார்ராஜி கலந்து கொண்டார்.

இதில், அவர் பந்தய தூரத்தை 13.17 விநாடிகளில் கடந்து 16-வது இடத்தார். ஒவ்வொரு ஹீட்ஸிலும் முதல் இரு இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்பதால் ஜோதி யார்ராஜி வெளியேறினார். ஜோதி யார்ராஜியின் தேசிய அளவிலான சாதனை 12.78 ஆக இருக்கும் நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் அவர், வெளிப்படுத்திய செயல் திறன் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது.

அரை இறுதியில் அமன் ஷெராவத் அதிர்ச்சி தோல்வி: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அமன் ஷெராவத், முன்னாள் ஐரோப்பிய சாம்பியனான வடக்கு மாசிடோனியாவின் விளாடிமிர் எகோரோவுடன் மோதினார். இதில் 21 வயதான அமன் ஷெராவத் 10-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

கால் இறுதி சுற்றில் அமன் ஷெராவத், முன்னாள் உலக சாம்பியனான அல்பேனியாவின் செலிம்கான் அபகரோவுடன் மோதினார். இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அமன் ஷெராவத் 12-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டியில் கால்பதித்தார். அரை இறுதியில் அவர், ஜப்பானின் ரெய் ஹிகுச்சியுடன் மோதினார். அதில் அமன் ஷெராவத் 0-10 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அரை இறுதியில் தோல்வி அடைந்த அமன் ஷெராவத், வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இன்று கலந்து கொள்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE