பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. 52 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33-வது ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில், அரை இறுதியில் தோல்விகளை சந்தித்த இந்தியா, ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் கால் பகுதியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் 15 நிமிடங்களில் ஸ்பெயினின் பாதுகாப்பு வளையத்துக்குள் ஊடுருவி பலமுறை இந்திய வீரர்கள் அச்சுறுத்தல் கொடுத்தனர்.
6-வது நிமிடத்தில் கோல் அடிக்கும் வாய்ப்பை இந்தியா உருவாக்கியது. துணை கேப்டன் ஹர்திக் சிங் வலதுபுறத்தில் இருந்து பந்தை அருமையாக நகர்த்திச் சென்று ‘டி’ பகுதிக்குள் நின்ற சுக்ஜீத் சிங்குக்கு அனுப்பினார். அவர், வலுவாக அடித்த ஷாட், கோல் வலையின் இடதுபுறம் விலகிச் சென்றது. இதனால் ஸ்பெயின் வீரர்கள் பெருமூச்சுவிட்டனர்.
18-வது நிமிடத்தில் இந்திய அணியின் வீரர் மன்பிரீத் சிங் ‘டி’ பகுதியில் ஸ்பெயின் வீரரை தேவையில்லாமல் ஃபவுல்செய்தார். இதனால் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை கேப்டன் மார்க் மிராலெஸ் கோலாக மாற்ற, ஸ்பெயின் அணி 1-0 என முன்னிலை வகித்தது. தொடர்ந்து அடுத்த இரு நிமிடங்களில் ஸ்பெயின் அணிக்கு 2 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், இந்திய அணி வீரர்கள் டிபன்ஸில் சிறப்பாக செயல்பட்டு ஸ்பெயினின் கோல் வாய்ப்பை முறியடித்தனர்.
» மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம்: முதல்வர் இன்று தொடங்குகிறார்
28-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை அந்த அணி வீணடித்தது. அடுத்த நிமிடத்தில் இந்திய அணிக்கு முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது கோலாக மாற்றப்படவில்லை. முதல் பாதி ஆட்டம் முடிய 21 விநாடிகளே இருந்த நிலையில் இந்திய அணிக்கு மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்ற முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது.
2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்ற இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து 35-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு மேலும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதில் ஹர்மன்பிரீத் சிங் வலுவாக அடித்தஷாட்டை ஸ்பெயின் கோல் கீப்பர் லூயிஸ் கால்சாடோ அற்புதமாக தடுத்தார்.
கடைசி ஒன்றரை நிமிடங்கள் இருந்த நிலையில் ஸ்பெயின் அணிக்கு 2 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் இந்திய அணியின் கோல் கீப்பர் பி.ஆர்.ஜேஷ் அற்புதமாக செயல்பட்டு தடுத்தார். முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.
ஸ்ரீஜேஷுக்கு பிரியாவிடை: இந்த போட்டியுடன் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் சர்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு இந்த ஆட்டம் சிறந்த பிரியாவிடை போட்டியாக அமைந்தது.
கடைசியாக இந்திய ஆடவர் ஹாக்கி அணி 1968 மற்றும் 1972-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் அடுத்தடுத்து பதக்கம் வென்றிருந்தது. இவை இரண்டும் வெண்கலப்பதக்கங்கள். அதன் பிறகு, 52 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தொடர்ந்து 2-வது முறையாக பதக்கம் வென்றுள்ளது. 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில்இந்தியா வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
ஒலிம்பிக் வரலாற்றில் ஆடவர் ஹாக்கியில் இந்தியா கைப்பற்றியுள்ள 13-வது பதக்கம் இது. இதுவரை 8 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago