பெற்றோரின் இழப்பு, தாத்தாவின் உத்வேகம்... அமன் ஷெராவத்தின் ஒலிம்பிக் பயணம்!

By கலிலுல்லா

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஒவ்வொரு சுற்றிலும் அசத்தி வரும் அமன் யார் என்பது குறித்து பார்ப்போம்.

வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவின் தகுதிச் சுற்றில் இந்தியாவின் அமன் ஷெராவத், மாசிடோனிய வீரர் விளாடிமிர் எகோரோவை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் ஜெலிம்கான் அபகரோவை 12-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். அவர் இந்தியாவின் பதக்க நம்பிக்கை வீரராக திகழ்கிறார். மேலும் நடப்பு ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் மல்யுத்தத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஒரே வீரர் அமன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த அமன்? - அப்போது அந்தச் சிறுவனுக்கு 10 வயது இருக்கும். தன் தாயை பறிகொடுத்த சோகத்தில் இருந்த சிறுவனுக்கு தந்தை தான் ஆறுதல். அந்தி மாலை வேளையில் தந்தையின் விரலைப் பிடித்துக்கொண்டு நடந்து சென்ற சிறுவனிடம் ‘இதோ வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்ற தந்தை திரும்பி வரவே இல்லை. அடுத்தடுத்த இழப்புகளைச் சந்தித்த இந்த சிறுவன் 10 ஆண்டுகள் கழித்து இன்று உலக அரங்கில் ஒலிம்பிக்கில் போட்டியில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையாக திகழ்கிறார். அவர் தான் அமன் ஷெராவத்.

“என் பெற்றோரை இழந்த பின்பு என்னுடைய உலகம் முற்றிலுமாக முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தேன்” என அமன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். பெற்றோரை இழந்ததும், அமன் மற்றும் அவரது சகோதரி பூஜா இருவரும் மாமா வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்த அவரது தாத்தா மாங்கேரம் ஷெராவத் தான் பெற்றோரை இழந்த துக்கத்திலிருந்து அமனை மீட்க உதவியிருக்கிறார். “அந்த சமயத்தில் நான் மல்யுத்ததை கைவிட நினைத்தபோது, என்னுடைய தாத்தா தான் எனக்கு ஊக்கமளித்து தொடர வழிவகை செய்தார்” என்றார் அமன்.

மல்யுத்தத்தை தொடரும் வகையில் பல்வேறு தடைகளைத் தாண்டி நண்பர்களின் உதவியால் துரோணாச்சாரியா விருது பெற்ற பயிற்சியாளர் லலித் குமாரிடம் சேர்ந்தார். டெல்லியின் சத்ரசல் ஸ்டேடியத்தில் நுழையும்போது அவருக்கு 10 வயது தான். அதுதான் அமனுக்கு எல்லாமுமாக இருந்த இடம். குறிப்பாக அந்தக் காலக்கட்டத்தில் அவரின் அறைத் தோழராக இருந்த சாகர் அவருக்கு பெரும் உறுதுணையாக இருந்தார். மல்யுத்த வீரரான சாகர், இந்திய விமானப் படையில் பணியாற்றுகிறார். நண்பர், சகோதரர், ஏன் பெற்றோர் இடத்திலிருந்து அவருக்கு உதவி செய்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற ரவி தஹியாவை இன்ஸ்பிரேஷனாக கொண்டிருந்தார்.

போட்டிகளும் வெற்றியும்: அமன் தனது 18-ஆவது வயதில் அதாவது 2021-ம் ஆண்டு தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தினார். அதன்பிறகு அமனின் வாழ்க்கை ஏற்றம் கண்டது. 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் 57 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2022-ல் ஸ்பெயினில் நடைபெற்ற U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். அதைத் தொடர்ந்து கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்ற 2023 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஜாக்ரெப் ஓபன் மல்யுத்தப் போட்டியில் சீனாவின் ஜூவான்ஹாவோ-வை 10-0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் பதக்கம் வென்றார்

“நான் களத்தில் இருக்கும்போது வெற்றி பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். நான் யாரை எதிர்க்கிறேன் என்பதை பொருட்படுத்துவதில்லை. மாறாக முழு உழைப்பையும் போட்டியில் செலுத்துகிறேன். மல்யுத்தம் எனக்கு ஒரு விளையாட்டு மட்டுமல்ல; இது எனது குடும்பத்தின் பாரம்பரியத்தை மதிக்கும் ஒரு வழி” என அமன் கூறியிருந்தார். தொடக்கத்தில் மணலில் வெற்றுத்தரையில் பயிற்சி மேற்கொண்டவர், இன்று ஒலிம்பிக் வரை முன்னேறி சாதித்துள்ளார். இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே ஒரு மல்யுத்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் அமன். நிச்சயம் அவர் இந்தியாவுக்காக இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE