“ஓய்வு முடிவை திரும்பப்பெற வேண்டும்” - வினேஷ் போகத்துக்கு சிறுவயது பயிற்சியாளர் கோரிக்கை

By செய்திப்பிரிவு

பானிபட்: வினேஷ் போகத் ஓய்வு முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று அவரது நெருங்கிய உறவினரும், சிறு வயது பயிற்சியாளருமான மஹாவீர் போகத் வலியுறுத்தியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்த இறுதிப் போட்டியில் வினேஷ் போகத் நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் (CAS- The Court of Arbitration for Sport) வினேஷ் போகத் மேல்முறையீடும் செய்துள்ளார். எனினும், மேல்முறையீடு முடிவு வெளியாகும் முன்னதாக, தனது ஓய்வு முடிவை வினேஷ் போகத் அறிவித்தார்.

“மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். என்னுடைய உத்வேகம் அனைத்தும் உடைந்துவிட்டது. என்னிடம் இப்போது எந்த வலிமையும் இல்லை. 2001 - 2024 மல்யுத்தத்துக்கு குட் பை” என்று தனது ஓய்வை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார் வினேஷ் போகத்.

இந்த நிலையில்தான், வினேஷ் போகத் ஓய்வு முடிவை திரும்ப பெறவேண்டும் என்று அவரது நெருங்கிய உறவினரும், சிறு வயது பயிற்சியாளருமான மஹாவீர் போகத் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள மஹாவீர் போகத், “அதிகாலை தான் ஓய்வு பற்றி வினேஷ் போகத் தெரிவித்தார். இவ்வளவு நெருங்கிவந்து பதக்கத்தை இழந்ததால் உண்டான மனநிலை காரணமாக ஓய்வு முடிவை அவர் எடுத்திருக்கலாம். யாராக இருந்தாலும், பதக்கம் வெல்வதற்கு இவ்வளவு நெருக்கமாக வந்தபிறகு இப்படியோரு நிலை வந்தால், கோபத்தால் இப்படிப்பட்ட முடிவைத்தான் எடுப்பார்கள். அதேபோல் தான் வினேஷ் போகத்தும் ஏமாற்றத்தால் ஓய்வு அறிவித்துள்ளார்.

ஆனால், அவர் ஓய்வு பெறக்கூடாது. வினேஷ் தனது ஓய்வு முடிவை திரும்ப பெறவேண்டும். அவரை நேரில் சந்தித்த பிறகு, வினேஷை உட்காரவைத்து இந்த முடிவை மாற்றிக் கொண்டு கடுமையாக உழைக்கச் சொல்லி வலியுறுத்துவேன்.

வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு எனக்கும் ஏமாற்றம், வருத்தம் இருந்தது. நானும் உடைந்துபோனேன். ஆனால், ஒரு குருவாக வினேஷ் போகத் தனது கனவுகளை கைவிடுவதை நான் விரும்பவில்லை. 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் அடுத்த தலைமுறை பெண் மல்யுத்த வீரர்கள் பங்கேற்பதற்காக வினேஷ் போகத் மற்றும் சாக்சி மாலிக் போன்றோர்கள் போராட வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE