கிட்டுமா வெள்ளிப் பதக்கம்? - வினேஷ் போகத் மேல்முறையீடு மீது கூடும் எதிர்பார்ப்பு

By செய்திப்பிரிவு

பாரிஸ்: “மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன்.” என்று ஒலிம்பிக் தகுதி நீக்கத்துக்குப் பின்னர் ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் போகத், வெள்ளிப் பதக்கமாவது கிடைக்காத என்ற ஒற்றை நம்பிக்கையில் மேல்முறையீடு செய்து ஓர் இடைக்கால உத்தரவுக்காகக் காத்திருக்கிறார்.

முன்னதாக நேற்று (ஆக.7) நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100கிராம் கூடியதால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் வினேஷ் போகத். இந்நிலையில் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் (CAS- The Court of Arbitration for Sport) அவர் மேல்முறையீடு செய்தார். வினேஷ் போகத்தின் இந்த மேல்முறையீடு மீது இன்று (ஆக.8) இடைக்கால உத்தரவு வெளியாகவிருக்கிறது.

CAS என்றால் என்ன? விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் என்பது விளையாட்டு தொடர்பான முரண்பாடுகளை நடுவர் அல்லது தீர்ப்பாயம் மூலம் தீர்க்க 1984-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு சுயாதீன அமைப்பு ஆகும். இது ஸ்விட்சர்லாந்தின் லோசேன்னில் தலைமையகம் கொண்டுள்ளது. நியூயார்க் மற்றும் சிட்னி ஆகிய நகரங்களில் நீதிமன்றங்களை கொண்டுள்ளது, மேலும் ஒலிம்பிக் நடத்தும் நகரங்களில் தற்காலிக நீதிமன்றங்களை அமைக்கிறது. அந்த வகையில் பாரிஸில் தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த நடுவர் நீதிமன்றத்தில் தான் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்துள்ளார். இன்று தனது இடைக்கால உத்தரவை அந்த நடுவர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஆனால், ஒலிம்பிக் மல்யுத்த சங்கம், வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் எவ்வித மாற்றத்துக்கும் வாய்ப்பில்லை என கெடுபிடியாக உள்ளது. இந்த நிலையில் இந்த இடைக்கால உத்தரவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வீரரின் ஆதரவு குரல்: இதற்கிடையே, வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளார் அமெரிக்க ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீரர் ஜோர்டன் பரோஸ். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த ஃப்ரீஸ்டைல் பிரிவில் தங்க பத்தகம் வென்றவராவார்.

வினேஷ் போகத்துக்கு ஆதரவாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் உலக மல்யுத்த கூட்டமைப்பின் (UWW) விதிகளில் திருத்தம் தேவை என சில விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

அவை வருமாறு: 1. போட்டியின் 2வது நாளில் 1 கிலோ வரை எடை சலுகை வேண்டும். 2. எடை சரிபார்க்கும் நேரம் காலை 8.30 மணியில் இருந்து 10.30 மணியாக மாற்றப்பட வேண்டும். 3. இறுதிப்போட்டியாளர்களில் ஒருவர் எடை காரணமாக நீக்கப்படும் முறையால் எதிர்காலத்தில் இறுதிப் போட்டிகளில் தோல்விகளே மிஞ்சும். 4. அரையிறுதி வெற்றிக்குப் பின்னர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இருவரின் பதக்கமும் உறுதி செய்யப்பட வேண்டும். அதாவது, அவர்கள் 2வது நாளில் எடை தகுதியில் தேறாவிட்டாலும். அவர்களின் பதக்கம் உறுதியாக்கப்பட வேண்டும். ஆனால், இரண்டாவது நாளிலும் எடைத் தகுதியில் தேறுபவருக்கே தங்க பதக்கம் என்றவகையில் விதியில் மாற்றம் செய்யலாம். 5. வினேஷுக்கு வெள்ளிப் பதக்கம் கொடுங்கள்.இவ்வாறு அமெரிக்க மல்யுத்த வீரர் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE