“இதுவும் விளையாட்டின் ஓர் அங்கம்தான்” - தகுதி நீக்கம் குறித்து வினேஷ் போகத்

By செய்திப்பிரிவு

பாரிஸ்: தன்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மல்யுத்த பயிற்சியாளர்களிடம் பேசிய வினேஷ் போகத் “இதுவும் விளையாட்டின் ஓர் அங்கம்தான்” என்று கூறியுள்ளார்.

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுவை அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.

ஆனால், நேற்று (ஆக 07) காலை 9 மணியளவில் நடந்த உடல் எடை தகுதி பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை தாண்டி 100 கிராம் எடையளவு கூட இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து நாடு முழுவதும் இந்த தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. பலரும் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக குரலெழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், மகளிர் மல்யுத்த தேசிய பயிற்சியாளர் வீரேந்தர் தஹியா மற்றும் மஞ்சீத் ராணி இருவரும் வினேஷ் போகத்தை பாரிஸில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: “இந்த நடவடிக்கை மல்யுத்த வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி வெளியான பிறகு மல்யுத்த வீராங்கனைகள் மிகவும் வருத்தம் அடைந்தனர். நாங்கள் வினேஷை சந்தித்து ஆறுதல் கூற முயன்றோம். அவர் தைரியமாகவே இருக்கிறார். அவர் எங்களிடம், ‘நாம் பதக்கத்தைத் தவறவிட்டது துரதிர்ஷ்டம்தான். ஆனால் இதுவும் விளையாட்டின் ஓர் அங்கமே’ என்று தெரிவித்தார்” இவ்வாறு அவர்கள் கூறினர்.

வினேஷ் போகத்துக்கு மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என நாடு முழுவதுமுள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.

வாசிக்க > வினேஷ் போகத் தகுதி நீக்கம்: பாரிஸ் ஒலிம்பிக்கில் தகர்ந்தது பதக்கக் கனவு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE