“நீங்கள் ஓர் உண்மையான சாம்பியன்!” - வினேஷ் போகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

By செய்திப்பிரிவு

சென்னை: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “எல்லா வகையிலும் நீங்கள் ஓர் உண்மையான சாம்பியன் வினேஷ். உங்களின் வலிமை, போராட்டம் மற்றும் இறுதிப் போட்டிக்கான உங்களின் குறிப்பிடத்தகுந்த பயணம் ஆகியவை மில்லியன் கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. ஒரு சில கிராம் காரணமாக நிகழ்த்தப்பட்ட தகுதி நீக்கம் உங்களின் உத்வேகத்தையும், சாதனைகளையும் குறைத்துவிடாது. நீங்கள் ஒரு பதக்கத்தை தவறவிட்டாலும், உங்களின் அபாரமான உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுள்ளீர்கள்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுவை அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.

ஆனால், இந்திய நேரப்படி இன்று காலை 9 மணியளவில் நடந்த உடல் எடை தகுதி பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை தாண்டி 100 கிராம் எடையளவு கூட இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம் அவரது பதக்கக் கனவு முற்றிலும் தகர்ந்தது. | முழு விவரம் > வினேஷ் போகத் தகுதி நீக்கம்: பாரிஸ் ஒலிம்பிக்கில் தகர்ந்தது பதக்கக் கனவு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE