“வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் சதி” - குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் சந்தேகம்

By செய்திப்பிரிவு

புது டெல்லி: “இது இந்தியா மற்றும் இந்திய மல்யுத்த வீரர்களுக்கு எதிரான மிகப் பெரிய சதி. யாரோ ஒருவருக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருந்திருக்கிறது. அதனால்தான் இந்த தகுதி நீக்கம் அரங்கேறியுள்ளது என நினைக்கிறேன்” என குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெவ்வேறு செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டிகளில், “இது இந்தியா மற்றும் இந்திய மல்யுத்த வீரர்களுக்கு எதிரான மிகப் பெரிய சதி. வினேஷ் போகத் களத்தில் செயல்பட்ட விதம் நிச்சயம் பாராட்டத்தக்கது. சிலரால் இந்த வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. விளையாட்டு வீரர்களாகிய எங்களால் ஒரே இரவில் 5 முதல் 6 கிலோ எடையை குறைக்க முடியும் எனும்போது, 100 கிராம் எடையால் என்ன பிரச்சினை?

யாரோ ஒருவருக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருந்திருக்கிறது. அதனால்தான் இந்த தகுதி நீக்கம் அரங்கேறியுள்ளது என நினைக்கிறேன். 100 கிராம் எடையை குறைக்க வினேஷ் போகத்துக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒலிம்பிக்கில் பங்கேற்றவன் என்ற முறையில் இதுபோன்ற சம்பவத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. சதி என நான் சொன்னது, இந்தியா விளையாட்டு துறையில் முன்னேற்றுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலர் செய்த செயலாக இருக்கலாம். வினேஷ் போகத் நிறைய சிரமங்களை எதிர்கொண்டார். இன்னும் அவர் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கூறுகையில், “வினேஷ் இப்படியான ஒரு தவறை செய்வார் என்பதை நான் நம்பவில்லை. காரணம், விளையாட்டு வீரராக நீண்ட அனுபவம் வாய்ந்த அவருக்கு இது பிரதான போட்டிகளின்போது எடையை குறைக்க வேண்டிய நுட்பங்கள் குறித்து நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், அதையும் தாண்டி ஏதோ ஒன்று நிகழ்ந்துள்ளது. அவரை நினைத்து நான் கவலை கொள்கிறேன். அவர் நலமுடன் இருப்பார் என நான் நம்புகிறேன். ஆனால், இன்று நடந்த சம்பவம் உண்மையில் முறையானதல்ல” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தான் எடை குறைத்த அனுபவம் குறித்து அவர் பகிரும்போது, “போட்டிக்கு முன் நான் தொடர்ந்து உமிழ்நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தேன். எதையுமே சாப்பிடவில்லை. தண்ணீரைக்கூட அனுமதிக்கவில்லை” என்றார்.

முன்னதாக, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுவை அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.

ஆனால், இந்திய நேரப்படி இன்று காலை 9 மணியளவில் நடந்த உடல் எடை தகுதி பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை தாண்டி 100 கிராம் எடையளவு கூட இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம் அவரது பதக்கக் கனவு முற்றிலும் தகர்ந்தது. | முழு விவரம் > வினேஷ் போகத் தகுதி நீக்கம்: பாரிஸ் ஒலிம்பிக்கில் தகர்ந்தது பதக்கக் கனவு

கடந்த 2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்று கொடுத்தவர் விஜேந்தர் சிங். இதுவே ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வென்ற முதல் பதக்கம் ஆகும். 2009-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம், 2010-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் உள்ளிட்டவற்றை வென்றுள்ளார். மேலும், அவர் தற்போது பாஜகவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE