லக்‌ஷயா சென் தோல்வி முதல் மனு பாகருக்கு அங்கீகாரம் வரை | இந்தியா @ ஒலிம்பிக்

By செய்திப்பிரிவு

பதக்க சுற்றிலும் லக்‌ஷயா சென் தோல்வி: பாட்மிண்டன் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்‌ஷயா சென், 7-வது இடத்தில் உள்ள மலேசியாவின் லீ சீ ஜியாவுடன் மோதினார். இதில் லக்‌ஷயா சென் முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 16-21 என இழந்தார். இதனால் வெற்றியை தீர்மானித்த கடைசி செட் பரபரப்பானது.

இதில் தொடக்கத்தில் லக்‌ஷயா சென் 2-7 என பின்தங்கினார். இதன் பின்னர் 5-10 என நெருங்கி வந்தார். ஆனால் லீ சீ ஜியா ஆக்ரோஷமாக விளையாடி வேகமாக புள்ளிகளை குவித்தார். முடிவில் அவர், இந்த செட்டை 21-11 என வசப்படுத்தினார். முடிவில் 71 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லீ சீ ஜியா 13-21, 21-16, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

கிரண் பஹல் 7-வது இடம்: மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்துக்கான ஹீட்ஸில் இந்தியாவின் கிரண் பஹல் பந்தய தூரத்தை 52.51 விநாடிகளில் கடந்து 7-வது இடம் பிடித்தார். இதன் மூலம் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். எனினும் கிரண் பஹலுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. மொத்தம் நடைபெற்ற 6 ஹீட்ஸில் ஒவ்வொன்றிலும் முதல் 3 இடங்களை பிடித்த வீராங்கனைகள் அரை இறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளனர். மீதம் உள்ள அனைவரும் ரெப்பஜேஜ் சுற்றில் கலந்து கொள்ள உள்ளனர். இதில் வெற்றி பெறுபவர் அரை இறுதிக்கு முன்னேற முடியும். இன்று நடைபெறும் இந்த சுற்றில் கிரண் பஹல் கலந்து கொள்கிறார்.

கால் இறுதி சுற்றில் இந்திய மகளிர் அணி: டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா, ருமேனியாவுடன் மோதியது. இதில் இந்திய மகளிர் அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

முதலில் நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா காமத் ஜோடி 11-9, 12-10, 11-7 என்ற நேர் செட்டில் அடினா டியாகோனு, எலிசபெட்டா சமரா ஜோடியை வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் மணிகா பத்ரா 11-5, 11-7, 11-7 என்ற செட் கணக்கில் பெர்னாடெட் சோக்ஸை தோற்கடித்தார். இதனால் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.

ஆனால் அடுத்த இரு ஆட்டங்களிலும் ருமேனியா வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் ஜா அகுலா 11-8, 4-11, 11-7, 6-11, 8-11 என்ற செட் கணக்கில் எலிசபெட்டா சமராவிடம் தோல்வி அடைந்தார். அடுத்த ஆட்டத்தில் அர்ச்சனா காமத் 5-11, 11-8, 7-11, 9-11 என்ற செட் கணக்கில் பெர்னாடெட் சோக்ஸிடம் வீழ்ந்தார். இதனால் போட்டி 2-2 என சமநிலையை எட்டியது.

வெற்றியை தீர்மானித்த கடைசி ஒற்றையர் ஆட்டத்தில் மணிகா பத்ரா 11-5, 11-9, 11-9 என்ற செட் கணக்கில் அடினா டியாகோனுவை வீழ்த்தி அசத்தினார். முடிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. கால் இறுதி சுற்றில் இந்திய அணி, அமெரிக்கா அல்லது ஜெர்மனியுடன் மோதக்கூடும்.

மகேஷ்வரி - அனந்த் ஜீத் ஜோடி 4-வது இடம்: துப்பாக்கி சுடுதலில் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் நேற்று தகுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் மகேஷ்வரி சவுகான், அனந்த் ஜீத் சிங் நருகா ஜோடி 146 புள்ளிகள் பெற்று 4-வது இடம் பிடித்ததுடன் வெண்கலப் பதக்க சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த சுற்றில் இந்திய ஜோடி, சீனாவின் யிடிங் ஜியாங், ஜெய்லின் லியு ஜோடியுடன் மோதியது. இதில் மகேஷ்வரி சவுகான், அனந்த் ஜீத் சிங் நருகா ஜோடி 43-44 என்ற கணக்கில் தோல்வி அடைந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது.

காயத்தால் நிஷா தோல்வி: மல்யுத்தத்தில் மகளிருக்கான ஃப்ரீஸ்டைல் 68 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் நிஷா தாஹியா, வட கொரியாவின் கம் பாக் சோலுடன் மோதினார். இதில் நிஷா தாஹியா ஒரு கட்டத்தில் 8-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். 90 விநாடிகளே எஞ்சியிருந்த நிலையில் நிஷா தாஹியாவின வலது கையில் காயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் விளையாடிய அவர், காயம் காரணமாக வலுவில்லாமல் இருந்தார். இதை பயன்படுத்திக் கொண்ட கம் பாக் சோல், நிஷா தாஹியாவின் கால்களை மடக்கி 9 புள்ளிகளை கொத்தாக அள்ளினார். முடிவில் இந்த மோதலில் நிஷா தாஹியா 8-10 என்ற கணக்கில் கண்ணீர் மல்க தோல்வி அடைந்தார்.

ஒலிம்பிக் நிறைவு விழாவில் தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார் மனு பாகர்: பாரிஸ் ஒலிம்பிக் திருவிழாவின் நிறைவு விழா அணி வகுப்பில் தேசியக் கொடியை இந்திய துப்பாக்கி சுடுதல் நட்சத்திர வீராங்கனையான மனு பாகர் ஏந்திச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

33-வது ஒலிம்பிக் திருவிழா பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் துப்பாக்கி சுடுத்தில் இந்திய வீராங்கனையான மனு பாகர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் வரும் 11-ம் தேதி நிறைவடையும் ஒலிம்பிக் திருவிழாவின் நிறைவு விழா அணி வகுப்பில் தேசியக் கொடியை மனு பாகர் ஏந்திச் செல்வார் என இந்திய ஒலிம்பிக் சங்க அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்