காயத்தால் பின்னடைவு: நிஷா தாஹியா காலிறுதியில் தோல்வி | ஒலிம்பிக் மல்யுத்தம்

By செய்திப்பிரிவு

பாரிஸ்: மகளிருக்கான 68 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தம் போட்டியில் களமிறங்கிய இந்தியாவின் நிஷா தாஹியா, காலிறுதியில் தோல்வியை தழுவினார். வட கொரியாவின் சோல் கம் பக் வசம் 8-10 என்ற கணக்கில் நிஷா தோல்வி அடைந்தார்.

காலிறுதி ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்தார் நிஷா. 8-2 என அவர் முன்னிலையில் இருந்தார். அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டத்தில் பின் தங்கினார். அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வட கொரிய வீராங்கனை விரைந்து புள்ளிகளை பெற்றார். இறுதியில் அவர் வெற்றி பெற்றார். முன்னதாக, 1/8 எலிமினேஷன் சுற்றில் உக்ரைனின் டெட்டியானா சோவா ரிஸ்கோவை 6-4 என அவர் வீழ்த்தி இருந்தார்.

உலக ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில் ஹங்கேரியின் அலினா சவுசுக், ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற செக் குடியரசின் அடெலா ஹன்ஸ்லிகோவா ஆகியோரை நிஷா வென்றார். தொடர்ந்து உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற ருமேனியாவின் அலெக்ஸாண்ட்ரா ஏஞ்சலுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் நிஷா தாஹியா பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அச்சமற்ற அணுகுமுறை நிஷா தாஹியாவின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. எனினும் ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் புள்ளிகளை பறிகொடுப்பது அவரது பலவீனமாக உள்ளது. அதுவே தற்போது நடந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE