இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிரஹாம் தோர்ப் காலமானார்

By செய்திப்பிரிவு

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிரஹாம் தோர்ப் காலமானார். அவருக்கு வயது 55. அவரது மறைவு செய்தியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திங்கள்கிழமை அன்று அறிவித்தது.

இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அவர், கடந்த 1993 முதல் 2005 வரையில் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,744 ரன்கள் எடுத்துள்ளார். 16 சதங்கள் மற்றும் 39 அரை சதங்கள் பதிவு செய்துள்ளார். 82 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் விளாசி இருந்தார். 189 பர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். ஆஸ்திரேலியாவில் சில ஆண்டுகள் பயிற்சியாளராக பணியாற்றினார். ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் போன்ற வீரர்களின் திறனை மேம்படுத்தியதில் இவருக்கும் பங்கு உண்டு. பின்னர் இங்கிலாந்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.

2010-ல் இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இணைந்தார். 2019 முதல் இங்கிலாந்து அணியின் அசிஸ்டன்ட் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இடையில் கரோனா தாக்கத்தின் போது இடைக்கால பயிற்சியாளராக செயல்பட்டார். 2021-22 ஆஷஸ் தொடருக்கு பிறகு இங்கிலாந்து அணியுடனான பயிற்சியாளர் பொறுப்பு முடிவுக்கு வந்தது. அவரது மறைவுக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள், கிரிக்கெட் வாரியம் மற்றும் டொமஸ்டிக் கிரிக்கெட் சங்கம் உள்ளிட்டவை இரங்கல் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE