பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார் ஜோகோவிச்: அல்கராஸ் 2-ம் இடம்

By செய்திப்பிரிவு

பாரிஸ்: ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸில் தங்கம் வென்றுள்ளார் செர்பியாவின் ஜோகோவிச். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் உள்ளிட்ட நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் மற்றும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இது கோல்டன் ஸ்லாம் என அறியப்படுகிறது. டென்னிஸ் உலகில் இந்த மைல்கல் சாதனையை எட்டிய ஐந்தாவது வீரர் ஆகியுள்ளார் ஜோகோவிச். ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தி இருந்தார்.

கடந்த 1988 சியோல் ஒலிம்பிக்கில் டென்னிஸ் மீண்டும் சேர்க்கப்பட்டது. அது முதல் இது நாள் வரையில் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற வீரர்களில் மூத்த வயது வீரர் என ஜோகோவிச் அறியப்படுகிறார். 37 வயதில் அவர் இதை செய்துள்ளார். இது தான் ஒலிம்பிக்கில் ஜோகோவிச் வெல்லும் முதல் தங்கம்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் அல்கராஸ் உடன் ஜோகோவிச் விளையாடி இருந்தார். அதில் அவர் தோல்வியை தழுவி இருந்தார். தற்போது வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE