ஒலிம்பிக் பாட்மிண்டனில் லக்‌ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேறி சாதனை!

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் பாட்மிண்டனில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

காலிறுதி ஆட்டத்தில் சீன தைபேவின் தியென் சென்னுடன் பலப்பரீட்சை மேற்கொண்டார் லக்‌ஷயா சென். இதில் முதல் செட்டில் 2-5 என்ற கணக்கில் அவர் பின் தங்கி இருந்தார். இருப்பினும் அந்த செட்டில் பலமான போட்டியை தியென் சென்னுக்கு கொடுத்திருந்தார். முதல் செட்டை 19-21 என்ற கணக்கில் இழந்திருந்தார். 2-வது செட்டை 21-15 என்ற கணக்கில் லக்‌ஷயா சென் கைப்பற்றினார்.

இந்த சூழலில் வெற்றியாளரை உறுதி செய்யும் கடைசி செட்டில் 0-2 என லக்‌ஷயா பின்தங்கி இருந்தார். அதன் பிறகு ஆட்டத்தில் எழுச்சி கண்ட அவர் 21-12 என அதில் வெற்றி பெற்றார். அதன் மூலம் ஆட்டத்திலும் வெற்றி பெற்றார். இந்திய பாட்மிண்டனில் புதிய வரலாறு படைத்துள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் வீரர் என்பது தான் அந்த சாதனை.

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று விக்டர் ஆக்சல்சென் அல்லது கீன் யூவுக்கு எதிராக அவர் அரையிறுதி ஆட்டத்தில் ஆட உள்ளார். முன்னதாக, ரவுண்ட் ஆஃப் சுற்றில் உலகத்தின் மூன்றாம் நிலை வீரரை லக்‌ஷயா வீழ்த்தி இருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE