சமனில் முடிந்த இந்தியா - இலங்கை முதல் ஒருநாள் போட்டி

By செய்திப்பிரிவு

கொழும்பு: இந்தியா - இலங்கை இடையிலான ஒரு நாள் தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 58 ரன்களை குவித்தார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 போட்டியில் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியுள்ளது. கொழும்புவின் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களைச் சேர்த்தது.

231 வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தது. இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், 13-வது ஓவரில் ஷுப்மன் கில் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 58 ரன்களில் எல்பிடபள்யூ முறையில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் கொடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகைள இழந்த இந்திய அணி 109 ரன்களைச் சேர்த்திருந்தது. பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த விராட் கோலி 24 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஸ்ரேயஸ் ஐயர் 23 ரன்களில் போல்டானார். வீரர்கள் நிலைக்காமல் சென்றது ஏமாற்றம் அளித்தது. 6-வது விக்கெட்டுக்கு கைகோத்த கே.எல்.ராகுல் - அக்சர் படேல் இணை முடிந்த அளவுக்கு விக்கெட் இழப்பின்றி பார்த்துக்கொண்டனர். இருப்பினும் 39-வது ஓவரில் ராகுல் 31 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்த ஓவரே அக்சர் படேல் 33 ரன்களில் கிளம்பினார். குல்தீப் யாதவ் கடைசி கட்டத்தில் 2 ரன்களுக்கு போல்டானார்.

48-வது ஓவரில் 14 பந்துகளில் 1 ரன்களை எடுக்க வேண்டிய சூழலில் துபே 25 ரன்களில் எல்பிடபள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார். 1 விக்கெட் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் 14 பந்துகளில் 1 ரன்னை எட்ட வேண்டிய சூழலில் களம் புகுந்தார் அர்ஷ்தீப் சிங். அவரும் அவுட்டாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்களைச் சேர்த்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது. மேலும், இந்தியா - இலங்கை இடையிலான முந்தைய போட்டியும் சமனில் முடிந்ததால், அடுத்தடுத்து சமன் காரணமாக சூப்பர் ஓவர் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா - இலங்கை இடையிலான ஆட்டம் சமனில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா, சரித் அசலங்கா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், துனித் வெல்லலகே 2 விக்கெட்டுகளையும், அகில தனஞ்சயா, அசிதா பெர்னான்டோ ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE