ஒலிம்பிக்கில் மனு பாகர் 3-வது பதக்கத்துக்கு ‘குறி’ - இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

By செய்திப்பிரிவு

பாரிஸ்: ஒலிம்பிக் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் தகுதிச் சுற்று பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து இந்திய வீராங்கனை மனு பாகர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் அவர் மூன்றாவது பதக்கத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தகுதிச் சுற்று பிரிவில் இந்தியாவின் மனு பாகர் உள்ளிட்ட 8 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் மனு பாகர் 590-24x புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தார். இதன்மூலம் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஹங்கேரி வீராங்கனை வெரோனிகா மேஜர் 592 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனையான ஈஷா சிங் 581-17x புள்ளிகள் பெற்று 18-வது இடம்பிடித்து வெளியேறினார். இதன் இறுதிப் போட்டி சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் மூலம் மனு பாகர் 3-வது பதக்கத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மீண்டுமொரு வரலாறு படைப்பாரா மனு பாகர்: முன்னதாக, இந்திய வீராங்கனை மனு பாகர், துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவு மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி என இரண்டிலும் அவர் வெண்கலம் வென்றுள்ளார். ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை என்ற தனித்துவ சாதனையை படைத்துள்ளார் மனு பாகர்.

இந்தச் சூழலில் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வென்று ஒரே ஒலிம்பிக்கில் 3 பதக்கங்களை வென்ற வீராங்கனை என்ற மீண்டுமொரு புதிய வரலாற்றை படைப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஒலிம்பிக்கில் 3 போட்டிகளில் பங்கேற்று வெளியேறிய மனு பாகர், இம்முறை தான் பங்கேற்ற 3 போட்டிகளின் இறுதிச் சுற்றிலும் முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE