ஒலிம்பிக் வில்வித்தை: இந்தியாவின் அங்கிதா - தீரஜ் இணை காலிறுதிக்கு முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

பாரிஸ்: ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா பகத் - தீரஜ் பொம்மதேவாரா ஜோடி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அங்கிதா - தீரஜ் இணை, இந்தோனேஷியாவின் தியானந்தா - ஆரிஃப் ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் இந்திய ஜோடி 5-1 என்ற கணக்கில் (37-36, 38-38, 38-37) வெற்றி பெற்றது.

தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, முதல் மற்றும் மூன்றாவது செட்கள் 37-36 மற்றும் 38-37 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது செட் 38-38 என்ற நிலையில் முடிவடைந்தது. அடுத்தடுத்து சிறப்பான பங்களிப்பை செலுத்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய ஜோடி.

முன்னதாக, ஆடவர் தனி நபர் வில்வித்தையில் இந்தியாவின் தருண் தீப் ராய், தீரஜ் ஆகியோர் தொடக்க நிலையிலேயே வெளியேறினர். மகளிர் தனிநபர் பிரிவில் அனுபவம் வாய்ந்த வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி மற்றும் பஜன் கவுர் இருவரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆனால், அங்கிதா முதல் சுற்றில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE