துப்பாக்கி சுடுதலில் வெண்கலம்; தோனியுடன் ஒப்பீடு: யார் இந்த ஸ்வப்னில் குசாலே? | பாரிஸ் ஒலிம்பிக்

By செய்திப்பிரிவு

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷனில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள 3-வது பதக்கம் இதுவாகும்.

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷனில் நேற்று இறுதி சுற்று நடைபெற்றது. 8 பேர் கலந்து கொண்ட இறுதி சுற்றில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே 451.4 புள்ளிகளை குவித்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷனில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் ஸ்வப்னில் குசாலே.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா கைப்பற்றும் 3-வது பதக்கம் இதுவாகும். ஏற்கெனவே மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாகரும், கலப்பு அணிகள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாகர், சரப்ஜோத் சிங் ஜோடியும் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனர். இந்த 3 பதக்கங்களுமே துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் கிடைக்கப்பெற்றுள்ளது.

50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் என்பது மண்டியிட்டு சுடுதல், படுத்தவாறு சுடுதல், நின்றபடி சுடுதல் ஆகிய 3 நிலைகளை கொண்டதாகும். இறுதிப் போட்டியில் ஸ்வப்னில் குசாலே முதற்கட்டத்தில் 4-வது இடத்தில் இருந்தார். மண்டியிட்ட நிலையில் சுடுதலில் அவரது கடைசி ஷாட்டில் 9.6 புள்ளியே கிடைத்தது. எனினும் அதன் பின்னர் ஸ்வப்னில் மீண்டு வந்தார்.

10.6 மற்றும் 10.3 புள்ளிகளை சேர்த்து 2-வது இடத்துக்கு முன்னேறினார். ஆனால் அடுத்த வாய்ப்புகளில் 9.1 மற்றும் 10.1 புள்ளிகளை சேர்த்ததால் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் அடுத்த வாய்ப்பில் 10.3 புள்ளிளை சேர்த்து 3-வது இடத்தில் தொடர்ந்தார். மண்டியிட்டு சுடுதலின் முடிவில் 153.3 புள்ளிகளுடன் 6-வது இடம் வகித்தார். இதன் பின்னர் படுத்தவாறு சுடுதலின் முடிவில் 310.1 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறினார். இறுதிப் பகுதியில் நின்றவாறு சுடுதலில் ஸ்வப்னில் குசாரே சீராக புள்ளிகளை சேர்த்ததால் 451.4 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து பதக்கம் வென்று சாதனை படைத்தார். சீனாவின் யுகுன் லியு 463.6 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும் செர்ஹி குலிஷ் 461.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

‘வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி’ - பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷனில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலே கூறும்போது, “இறுதிப் போட்டியையொட்டி நான் எதுவும் சாப்பிடவில்லை. வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது போன்று உணர்ந்தேன். பால் கலக்காத தேநீர் மட்டுமே அருந்திவிட்டு போட்டியில் பங்கேற்க வந்தேன். ஒவ்வொரு போட்டிக்கும் முந்தைய இரவில் நான் கடவுளை வேண்டிக்கொள்வேன். இறுதி போட்டி என்பதால் இதயத் துடிப்பு அதிகமாக இருந்தது. சுவாசத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்தேன், வேறு எதையும் முயற்சிக்கவில்லை.

உண்மையாக சொல்லவேண்டுமெனில், நான் ஸ்கோர்போர்டைப் பார்க்கவில்லை. இது எனது பல வருட கடின உழைப்பு, அதைத்தான் போட்டியின் போது மனதில் வைத்திருந்தேன். ஸ்கோர் அறிவிப்புகளை கேட்டுக் கொண்டிருந்தேன், ஆனால் அதைப் புறக்கணித்தேன். இந்திய ரசிகர்கள் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பினேன். உண்மையில், நான் ரயில்வே வேலைக்குச் செல்வதில்லை. ஒலிம்பிக்கில் நாட்டுக்காக சிறப்பாகச் செயல்பட இந்திய ரயில்வே எனக்கு 365 நாட்கள் விடுமுறை அளித்தது. எனது தனிப்பட்ட பயிற்சியாளர் தீபாலி தேஷ்பாண்டே எனக்கு ஒரு தாய் போன்றவர். அவர் எனக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளார்” என்றார்.

வங்கியில் கடன் வாங்கி ஸ்வப்னிலுக்கு துப்பாக்கி வாங்கி கொடுத்த தந்தை: பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷனில் வெண்கலப் பதக்கம் வென்றஸ்வப்னில் குசாலே மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் அருகே உள்ள கம்பல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சுரேஷ் ஆசிரியர், தாய் அனிதா கிராமத்தலைவராக உள்ளார். 2009-ம் ஆண்டில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஸ்வப்னில் குசாலே 2012-ம் ஆண்டு முதன்முறையாக சர்வதேச போட்டியில் அறிமுகமானார். அதன் பின்னர் 12 வருடங்களுக்குப் பிறகு தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

2016-ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான திட்டங்களில் ஸ்வப்னில் குசாலே இல்லை. இதன் பின்னர் 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டிருந்தார். இம்முறை பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு அவர், கடினமாக உழைத்தார். கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 4-வது இடம் பிடித்ததன் வாயிலாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்திய தேர்வுக்குழுவினரால் நடத்தப்பட்ட போட்டிகளிலும் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தியிருந்தார்.

இதற்கு பலனமாக தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இருப்பினும் அவர், கடந்து வந்த பாதை கடினமானதே. ஸ்வப்னில் குசாலே முதன் முறையாக துப்பாக்கி சுடுதல் விளையாட்டை கற்றுக்கொள்ளும் போது அதற்கான துப்பாக்கியை அவரது தந்தை சுரேஷ், வங்கியில் கடன் பெற்றே வாங்கி கொடுத்துள்ளார். விளையாட்டில் மகனை வார்த்தெடுப்பதற்காக சுமார் ரூ.25 லட்சம் வரை செலவிட்டுள்ளார். அதற்கு தகுந்தபடி விளையாட்டில் சீரான முன்னேற்றம் கண்டு ஜூனியர் முதல் சீனியர் வரை பல்வேறு பதக்கங்களை வென்று ஸ்வப்னில் குசாலே 2015-ம் ஆண்டு மத்திய ரயில்வேயில் டிக்கெட் கலெக்டராக பணியில் சேர்ந்தார்.

இதனாலேயே ஸ்வப்னில் குசாலே, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனியுடன் ஒப்பிடப்பட்டு வருகிறார். தோனியும் டிக்கெட் கலெக்டராக பணியாற்றியவர்தான். அவர், கிரிக்கெட்டில் நாட்டை பெருமைப்பட வைத்தார். ஸ்வப்னில் குசாலே, ஒலிம்பிக்கில் பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.

ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு: பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷனில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பதிவில், “பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷனில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு வாழ்த்துக்கள். அவரது செயல்திறன் சிறப்பு வாய்ந்தது. இந்த பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சியில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்