பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார் பி.வி.சிந்து: சீன வீராங்கனையிடம் தோல்வி

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு லீக் ஆட்டத்தின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் சீன வீராங்கனையான ஹா பிங் ஜியாவிடம் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக் தொடரிலிருந்து சிந்து வெளியேறியுள்ளார்

பாட்மிண்டனில் மகளிர் ஒற்றையர் பிரிவு லீக் சுற்றில் ‘எம்’ பிரிவில் இடம் பெற்றுள்ள 13-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து தனது 2-வது ஆட்டத்தில் 73-ம் நிலை வீராங்கனையான எஸ்டோனியாவின் கிறிஸ்டின் குபாவை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-5, 21-10 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் சிந்து.

இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 01) நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், அதாவது காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் சீன வீராங்கனையான ஹா பிங் ஜியாவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அழுத்தத்தை எதிர்கொண்ட சிந்து 8-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.

பின்னர் பி.வி. சிந்து 12-12 என்ற கணக்கில் சமன் செய்த நிலையில், ஹா பிங் ஜியா 21- 19 என்ற கணக்கில் முன்னேறினார். இறுதியில் சிந்து, 19-21, 14-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து சிந்து வெளியேறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றவரான பி.வி.சிந்து கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹா பிங் ஜியாவை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த முறை பி.வி.சிந்து நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வெளியேற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE