இந்திய வீரர் லக்‌ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம் | பாரிஸ் ஒலிம்பிக்

By செய்திப்பிரிவு

பாரிஸ்: ஒலிம்பிக் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 வயதான இந்தியாவின் லக்‌ஷயா சென் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 21-12, 21-6 என்ற செட் கணக்கில் ஹெச்.எஸ்.பிரனாயை வீழ்த்தியுள்ளார்.

வியாழக்கிழமை நடைபெற்ற பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென், சக இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரனாயுடன் மோதினார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய லக்‌ஷயா முதல் செட்டை 21-12 என கணக்கில் கைப்பற்றி அசத்தினார். 2ஆவது செட்டிலும் லக்‌ஷயா முன்னிலைப் பெற்றார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய அவர், 21-12, 21-6 என்ற கணக்கில் ஹெச்.எஸ். பிரனாயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

போட்டிக்குப் பின் பேசிய லக்‌ஷயா சென், “கடினமான போட்டிகள் நம்பிக்கையைத் தரும் என்று நினைக்கிறேன். அடுத்தடுத்து போட்டிகளுக்குச் செல்ல நான் இப்போது தயாராக இருக்கிறேன். காலிறுதி ஆட்டத்தில் என்னுடைய முழு பங்களிப்பை செலுத்துவேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

லக்‌ஷயா சென் காலிறுதியில் 12-ஆம் நிலை வீரரான சீனாவின் சவு தியென் சென்’னை எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது. முன்னதாக இன்றைய பாட்மிண்டன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய ஜோடி சாத்விக் - சிராக் ஜோடி 21-13, 14-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE