பி.வி.சிந்து வெற்றி முதல் மணிகா பத்ரா தோல்வி வரை | இந்தியா @ ஒலிம்பிக் 2024

By செய்திப்பிரிவு

இறுதி சுற்றுக்கு முன்னேறி ஸ்வப்னில் சாதனை: துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு தகுதி சுற்று நேற்று நடைபெற்றது. 44 பேர் கலந்து கொண்ட இதில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். இதில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே 7-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ஸ்வப்னில் குசலே. அவர், மண்டியிட்ட நிலையில் 198 புள்ளிகள், படுத்த நிலையில் 197 புள்ளிகள், நின்ற நிலையில் 195 புள்ளிகள் என ஒட்டுமொத்தமாக 590 புள்ளிகளை குவித்தார். ஸ்வப்னில் குசாலே 2015 முதல் ரயில்வேயில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

மற்றொரு இந்திய வீரரான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 589 புள்ளிகள் சேர்த்து 11-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். சீனாவின் லியு யுஹுன் (594) முதலிடத்தையும், நார்வேயின் ஜான் ஹெர்மான் ஹெக் (593) 2-வது இடத்தையும், உக்ரைனின் செர்ஹி குலிஷ் (592) 3-வது இடத்தையும் பிடித்து இறுதி சுற்றில் நுழைந்தனர். பிரான்ஸின் லூகாஸ் கிரிஸ் (592), செர்பியாவின் லாசர் கொவாசெவிக் (592), போலந்தின் டோமாஸ் பார்ட்னிக் (590), செக் குடியரசின் ஜிரி பிரிவ்ராட்ஸ்கி (590) ஆகியோரும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஸ்ரீஜா அகுலா சாதனை: டேபிள் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, சிங்கப்பூரின் ஜியான் ஜெங்குடன் மோதினார். இதில் ஸ்ரீஜா அகுலா கடுமையாக போராடி 9-4, 12-10, 11-4, 11-5, 11-12, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த நிலையில் அதில் இருந்து மீண்டு வந்து வெற்றி கண்டுள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர், கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய 2-வது இந்தியர் என்ற பெருமையை ஸ்ரீஜா அகுலா பெற்றார்.இந்த வெற்றி அவருக்கு பிறந்தநாள் பரிசாக அமைந்தது. நேற்று ஸ்ரீஜா அகுலாவுக்கு 26-வது பிறந்த நாளாகும்.

ஜெய்ஸ்மின், பிரீத்தி தோல்வி: மகளிருக்கான குத்துச்சண்டையில் 57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிலிப்பைன்ஸின் நெஸ்தி பெட்டீசியோவுடன் மோதினார். இதில் ஜெய்ஸ்மின் லம்போரியா 0-5 என்ற கணக்கில் வீழ்ந்தார். இதேபோன்று மகளிருக்கான குத்துச்சண்டை 54 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பிரீத்தி பவார், கொலம்பியாவின் யெனி அரியாஸுடன் மோதினார். இதில் பிரீத்தி பவார் 2-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.

கால் இறுதியில் லோவ்லினா: பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான குத்துச்சண்டையில் 75 கிலோ எடைப் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்று நேற்று நடைபெற்றது. இதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன், நார்வேயின் ஷன்னிவா ஹாஃப்ஸ்டாட்டுடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லோவ்லினா போர்கோஹெய்ன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். வரும் 4-ம் தேதி நடைபெறும் கால் இறுதி சுற்றில் சீனாவின் லி கியானுடன் பலப்பரீட்சை நடத்துகிறார் லோவ்லினா போர்கோஹெய்ன்.

கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பி.வி.சிந்து: பாட்மிண்டனில் மகளிர் ஒற்றையர் பிரிவு லீக் சுற்றில் ‘எம்’ பிரிவில் இடம் பெற்றுள்ள 13-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து தனது 2-வது ஆட்டத்தில் 73-ம் நிலை வீராங்கனையான எஸ்டோனியாவின் கிறிஸ்டின் குபாவை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-5, 21-10 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். சிந்து தனது முதல் சுற்றில் மாலத்தீவுகளைச் சேர்ந்த ஃபாத்திமத் அப்துல் ரசாக்கை வீழ்த்தியிருந்தார். தற்போதைய வெற்றியின் மூலம் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் சிந்து.

லக்‌ஷயா சென் அசத்தல்: பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு லீக் சுற்றில் ‘எல்’ பிரிவில் இடம் பெற்றுள்ள 22-ம் நிலை வீரரான இந்தியாவின் லக்‌ஷயா சென் தனது 2-வது ஆட்டத்தில் உலகத் தர வரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை எதிர்த்து விளையாடினார். இதில் லக்‌ஷயா சென் 21-17, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். லக்‌ஷயா செனுக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அவர், கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் கால்பதித்தார்.

மணிகா பத்ரா தோல்வி: மகளிருக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, ஜப்பானின் மியூ ஹிரானோவுடன் மோதினார். இதில் மணிகா பத்ரா 1-4 (6-11, 9-11, 14-12, 8-11, 6-11) என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்