இந்தியாவின் லவ்லினா காலிறுதிக்கு முன்னேற்றம் | ஒலிம்பிக் குத்துச்சண்டை

By செய்திப்பிரிவு

பாரிஸ்: ஒலிம்பிக் குத்துச்சண்டையில் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன். 75 கிலோ எடைப் பிரிவில் நார்வேயின் சுனிவா ஹோஃப்ஸ்டாட்டை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அவர் வீழ்த்தினார்.

இந்த ஆட்டம் தொடங்கியதும் லவ்லினாவை செட்டில் ஆக விடாமல் சில பஞ்ச்களை கொடுத்தார் சுனிவா. இருந்தும் சுதாரித்துக் கொண்ட லவ்லினா கவுண்டர் அட்டாக் செய்தார். அதற்கு தனது உயரத்தையும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். ஆக்ரோஷமான அணுகுமுறை மூலம் தனக்கு வேண்டிய புள்ளிகளை பெற்றார். மூன்று சுற்றுகளின் முடிவில் 5-0 என்ற புள்ளிகளின் அடிப்படையில் லவ்லினா வெற்றி பெற்றார்.

வரும் 4-ம் தேதி சீனாவின் லி க்வின் உடனான காலிறுதி போட்டியில் லோவ்லினா விளையாட உள்ளார். கடந்த ஆசிய போட்டிகளில் லோவ்லினாவை லி வீழ்த்தி இருந்தார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் லவ்லினா பதக்கம் வெல்வது உறுதி ஆகும். கடந்த முறை டோக்கியோவில் லோவ்லினா, வெண்கலம் வென்று இருந்தார். இந்த முறை பதக்கத்தை நிறத்தை மாற்ற விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லவ்லினா

உலக சாம்பியன்ஷிப்பில் 3 முறை பட்டம் வென்றுள்ள லவ்லினா குத்துச்சண்டை உலகில் பிரபலமான பெயராக மாறியுள்ளார். கடந்த முறை டோக்கியோவில் 69 கிலோ பிரிவில் விளையாடிய லவ்லினா இம்முறை 75 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுகிறார். இந்த ஆண்டு செக் குடியரசில் நடைபெற்ற கிராண்ட் பிரி போட்டியில் வெள்ளி வென்ற லவ்லினா உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE