மனு பாகர் சாதனை முதல் பஜன் கவுர் அசத்தல் வரை | இந்தியா @ ஒலிம்பிக் 2024

By செய்திப்பிரிவு

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது நாளான நேற்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் பதக்க சுற்று நடைபெற்றது.

இதில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் மனு பாகர், சரப்ஜோத் சிங் ஜோடியானது கொரியாவின் லீ வோனோஹோ, ஓ யே ஜின் ஜோடியை எதிர்கொண்டது. இதில் மனு பாகர், சரப்ஜோத் சிங் ஜோடி 16-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்தியா வெல்லும் 2-வது பதக்கம் இதுவாகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும் மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது அவர், 2-வது முறையாக பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டில் ஒரே நேரத்தில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார் 22 வயதான மனு பாகர். இதற்கு முன்னர் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த போது 1900-ம்ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நார்மன் பிரிட்சார்ட் 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 200 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

இரு பதக்கம் வென்றவர்கள்... நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டில் இரு பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்களின் பட்டியலில் தற்போது மனு பாகரும் இணைந்துள்ளார். இதற்கு முன்னர்மல்யுத்தத்தில் சுஷில் குமார் 2008-ம்ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும், 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார். இதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பாட்மிண்டனில் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கமும், 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தார்.

ஹாக்கியில் இந்தியா சாதனை: பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் நேற்று அயர்லாந்துடன் மோதியது. இதில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 11-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக்கையும், 19-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பையும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றி அசத்தினார். இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.
முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை தோற்கடித்த இந்திய அணி, அர்ஜெண்டினாவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்திருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் இந்திய அணி 7 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி நாளை (ஆகஸ்ட் 1-ம் தேதி) பெல்ஜியத்துடன் மோதுகிறது.

சாட்விக்-ஷிராக் ஜோடி வெற்றி: ஆடவருக்கான பாட்மிண்டன் இரட்டையர் பிரிவில் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் சாட் விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி ஏற்கெனவே கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த ஜோடி தங்களது கடைசி லீக் ஆட் டத்தில் நேற்று இந்தோனேஷியாவின் இந்தோனேஷியா வின் ஃபஜர் அல்பியான் - முஹம்மது ரியான் அர்டி யான்டோ ஜோடியுடன் மோதியது. இதில் சாட்விக் ஷிராக் ஜோடி 21-13, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந் திய ஜோடி லீக் சுற்றை தனது பிரிவில் முதலிடத் துடன் நிறைவு செய்துள்ளது.

அமித் பங்கல் தோல்வி: ஆடவருக்கான குத்துச்சண்டையில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமித் பங்கல், ஸாம்பியாவின் பேட்ரிக் சினெம்பாவுடன் மோதினார். இதில் அமித் பங்கல் 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.

பிருத்விராஜ் தொண்டைமான் 21-வது இடம்: துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான டிராப் பிரிவில் இந்திய வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி சுற்றில் 21-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். தமிழகத்தைச் சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி சுற்றில் 125-க்கு 118 புள்ளிகளை பெற்றார். 5 சுற்றுகள் கொண்ட போட்டியில் அவர், முறையே 22, 25, 21, 25, 25 புள்ளிகள் சேர்த்தார். 30 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த பிரிவில் முதல் 6 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி சுற்றுடன் வெளியேறினார்.

வில்வித்தையில் பஜன் கவுர் அசத்தல்: வில்வித்தையில் மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா பகத், போலந்தின் வியோலெட்டா மைஸோருடன் மோதினார். இதில் அங்கிதா பகத் 4-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீராங்கனையான பஜன் கவுர் தனது முதல் சுற்றில் இந்தோனேஷியாவின் சைஃபா நுராபிஃபா கமாலுடன் மோதினார். இதில் பஜன் கவுர் 7-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். தொடர்ந்து அடுத்த சுற்றில் பஜன் கவுர் 6-0 என்ற கணக்கில் போலந்தின் வியோ லெட்டா மைஸோரை தோற்கடித்து, கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

பால்ராஜ் பன்வார் 5-வது இடம்: படகு போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் பந்தய தூரத்தை 7 நிமிடங்கள் 5.10 விநாடிகளில் கடந்து 5-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். 5-வது இடத்தை பிடித்த அவர், 13 முதல் 24- வது இடங்களுக்கான பந்தயத்தில் கலந்து கொள்கிறார்.

கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி மணிகா பத்ரா சாதனை: பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 28-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மணிகா பத்ரா, 18- வது இடத்தில் உள்ள பிரான்ஸின் பிரித்திகா பவடேவை எதிர்த்து விளையாடினார். இதில் மணிகா பத்ரா 11-9, 11- 6, 11-9, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

இதன் மூலம் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை அவர், பெற்றுள்ளார். மணிகா பத்ராவிடம் தோல்வி அடைந்த பிரித்திகா பவடே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். அவருடைய பெற்றோர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 2003-ல் பிரான்ஸுக்கு குடிபெயர்ந்துள்ளனர். அடுத்த ஆண்டில் பிரித்திகா பவடே பிறந்துள்ளார். 19 வயதான பிரித்திகா பவடே டோக்கியோ ஒலிம்பிக்கிலும் பங்கேற்றிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE