கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 33வது போட்டியில் டாஸ் வென்று முதலில் சென்னை பேட் செய்ய அழைத்த கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், சில சாதுரியமான கேப்டன்சியில் சென்னையை 177/5 என்று மட்டுப்படுத்தி பிறகு 17.4 ஓவர்களில் 180/4 என்று சென்னை சூப்பர் கிங்ஸை டூப்பர் கிங்ஸ் ஆக்கினார்.
கொல்கத்தா தன் வெற்றி மூலம் 3-ம் இடத்தில் உள்ளது, சென்னை தோற்றதால் நிகர ரன் விகித அடிப்படையில் சன் ரைசர்ஸ் முதலிடம் வகிக்கிறது.
காண்பவற்றை நம்ப வேண்டும்?
இந்தப் போட்டியில் 2 முக்கியமான தருணங்களைக் குறிப்பிட வேண்டியுள்ளது, அதில் இந்தியாவின் சிறந்த பீல்டர் என்று கருதப்படும் ஜடேஜா 2 கேட்ச்களை, அதுவும் ஒரே ஓவரில் அடுத்தடுத்து அதிரடி வீரர் சுனில் நரைனுக்கு நழுவ விட்டது எப்படி? ஆட்டத்தின் போக்கில் இயல்பாக நடப்பதுதான் என்று சிஎஸ்கே ரசிகர் படை கருதலாம். ஆமாம்! ஜடேஜா கேட்சை விட்டது உண்மைதான்! இல்லை... உண்மையாகத்தான் சார் அவர் கேட்சை விட்டார்...நம்புங்க சார் அந்தக் கேட்சை உண்மையாகத்தான் விட்டார்... உண்மையாவே அவர் கேட்ச் விட்டார் சார்... உண்மையான கேட்சை விட்டார் சார்...இன்னும் எப்படியெல்லாமோ சொல்லிப் பார்த்தாலும் கடைசியில் நாம் காண்பவற்றை நம்பித்தானே ஆகவேண்டும்?!
18-19-ம் நூற்றாண்டு முதலாண்மை (கேப்பிடலிசம்) கொடுத்த கொடையான நவீனத்துவம் நமக்களித்த உபகொடையான காட்சி ஊடகத் தொழில்நுட்பங்கள் மூலம் seeing is believing... (be'lie'ving) கண்டதே காட்சி கொண்டதே கோலம்... சிலவற்றை இப்படித்தான் பார்க்க வேண்டும், அது நமக்கு இன்னமாதிரியான உணர்வைத்தான், அனுபவத்தைத்தான் அளிக்க வேண்டும் என்பது ஒருவிதத்தில் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. சிந்தனை ஒன்றைத்தான் முன் கூட்டிய சக்திகளால் தீர்மானிக்க முடியாது, ஏனெனில் அது கேள்வி கேட்கும், சந்தேகப்படும், சம்சயங்களை இடையீடாக, தலையீடாக (intervention) மாற்றி கேள்வி எழுப்பும். நடப்பவற்றை தொகுத்து வழங்குதல் என்பதை காண்பவற்றையெல்லாம் நம்பும் நம் கட்புலன் அனுபவமே வழங்கிவிடும்... எனவே தொகுத்து வழங்குதல் நம் வேலையல்ல, விமர்சன இடையீடு, தலையீடு செய்து நடப்பவற்றின் குறுக்கே புகுந்து கலைத்துப் போட வேண்டும். அதனால்தான் மகாகவி பாரதியார் காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைவதெல்லாம் காண்பமன்றோ என்று விமர்சன அணுகுமுறையை காண்பவை மறைக்கும் விஷயங்களைப் பார்க்க வலியுறுத்துகிறார்.
அதனால் ஜடேஜா அடுத்தடுத்து விட்ட 2 கேட்ச்கள் எப்படிப்பட்டது என்பது மேற்கூறிய தர்க்கத்தின் படி வாசகர்களின் சிந்தனைக்கு விட்டு விடுகிறோம். அதேபோல் கடைசி ஓவர்... பியூஷ் சாவ்லா வீசுகிறார், ஸ்கோர் 162/4 தான் உள்ளது, ஸ்ட்ரைக் தோனியிடம் உள்ளது, மிட்விக்கெட்டில் 1 ரன் எடுக்கிறார். ஜடேஜா திக்கித் திணறுவதை எதிர்முனையில் இருந்து பார்க்கும் தோனி பிடிவாதமாக அவரிடம் ஸ்ட்ரைக்கை கொடுக்கிறார். அன்று பிராவோ எதிர்முனையில் இருந்த போது சிங்கிள் எடுக்காமல் தானே ஸ்ட்ரைக்கை வைத்துக் கொண்டவர் நேற்று ஜடேஜா ஏதோ பெரிய ஹிட்டர் போல் ஸ்ட்ரைக்கை விட்டுக் கொடுக்கிறார். தோனி ஆடியிருந்தால் 2-3 சிக்சர்கள் வாய்ப்பைப் பெற்றிருக்கலாம். இந்த ஓவரில் 4 ரன்கள் கூடுதலாக பை மூலம் வந்ததால் 15 ரன்கள் வந்தது. மேலும் கடைசி பந்தை தோனி பவுண்டரி அடித்தார், இல்லையெனில் இந்த ஓவரில் ரன்கள் குறைந்திருக்கும். ஜடேஜா மீது இருக்கும் நம்பிக்கை தோனியின் தனிப்பட்ட நம்பிக்கையாக இருக்கலாம் ஆனால் அணி என்று வரும்போது ஜடேஜாவிடம் ஸ்ட்ரைக்கைக் கொடுக்கக் கூடாது. அன்று பிராவோவுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் ஒரு ரன்னை மறுத்ததற்கும் இதற்கும் பெரிய முரண்பாடு உள்ளதே? ஜடேஜாவுக்குப் பதில் ஹர்பஜனைக் கூட இறக்கியிருக்கலாம். ஜடேஜா மீது தோனி வைத்திருக்கும் நம்பிக்கை கிரிக்கெட் தகுதிகளையும் தாண்டியதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. இதற்கான பதிலையும் காண்பவற்றை நம்பும் சிஎஸ்கே ரசிகர்களிடத்திலேயே விடுத்து, நாம் மேட்சிற்கு நகர்வோம்..
இந்த மைதானத்தில் பவுண்டரிகள் குறுக்கப்பட்ட நிலையில் குறைந்தது 200 ரன்களாகவது வேண்டும். இந்த மைதானத்தில் 200 ரன்கள் இல்லையெனில் இலக்குகளை வெற்றிகரமாக தடுக்க முடியாது. அதனால்தான் தினேஷ் கார்த்திக் முதலில் சென்னையை பேட் செய்ய அழைத்தார்.
ஷேன் வாட்சன், டுபிளெசிஸ் அன்று போல் அதிரடியாகவே தொடங்கினர். டுபிளெசிஸ் மிக அருமையாக 4 பவுண்டரிகள் மிட்செல் ஜான்சனை அடித்த சிக்ஸ் அபாரம். நன்றாக ஆடிவந்த டுபிளெசிஸ் சாவ்லாவின் கூக்ளியை லெக் பிரேக் என்று தவறாகக் கணித்து பவுல்டு ஆகி வெளியேறினார்.
ஷேன் வாட்சனும் அனாயசமாக அதிரடி காட்டினார் என்று கூற முடியாது, கொஞ்சம் தயங்கித்தயங்கி தேர்ந்தெடுத்துத்தான் அடித்தார், அதில் இவரும் மிட்செல் ஜான்சனை அடித்த சிக்ஸ் உண்மையில் டாப் கிளாஸ். 24 பந்துகளில் 36 ரன்களில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசி ஆட்ட நாயகன் சுனில் நரைனின் (2/20) முதல் விக்கெட்டாக மிட்விக்கெட்டில் புல்ஷாட்டில் வெளியேறினார்.
ரெய்னாவுக்கு சில இலவச பவுண்டரி பந்துகள் வழங்கப்பட்டதில் 26 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் லாங் ஆனில் கேட்ச் கொடுத்தார் பந்தை மிடில் செய்ய ரீச் செய்ய முடியவில்லை. ராயுடு 17 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து இன்னொரு அதிரடிக்குத் தயாராக இருந்த போது சுனில் நரைன் வீசிய ஆஃப் பிரேக் பந்தை தேர்ட்மேனில் ஓடவிட முயற்சி செய்தார், பவுல்டு ஆனார்.
தோனி மீண்டும் விளாசல்...
தோனி இதற்கு முன்னால் 3 அரைசதங்களை அவுட் ஆகாமல் எடுத்திருக்கும் பார்மில் உள்ளதால் அவருக்கு வீசும்போது எச்சரிக்கையுடன் நகர்த்த வேண்டும், ஆனால் ஷிவம் மாவி, மிட்செல் ஜான்சன் இருவருமே ஒன்று புல்லாக வீசினர் இல்லை ஷார்ட் பிட்சாக வீசினர், இதில் ஷிவம் மாவி வீசிய 145 கிமீ வேகப் பந்தை தோனி கண்ணிமைக்கும் நேரத்தில் மிட்விக்கெட் மேல் மிகப்பெரிய சிக்சரை அடித்தது அபாரம், அதே போல் மிட்செல் ஜான்சனை தன் இடுப்புயரத்திலேயே ஸ்கொயர் லெக்கில் தோனி அடித்த சிக்சரும் தோனியின் ஹிட்டிங் பவரைக் காண்பிக்கக் கூடியது, மேலும் ‘இப்படீல்லாம் போடாதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது’ என்று கூறுவது போன்ற அடியாகும் அது.
முதல் 9 பந்தில் 5 ரன்கள் எடுத்த தோனி அடுத்த 11 பந்துகளில் 4 சிக்சர்களுடம் 30 ரன்கள் சேர்த்தார். கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே 56 ரன்கள் எடுத்ததில் தோனி பெரும்பான்மையாக 39 ரன்கள் பங்களிப்பு. தோனி 43 நாட் அவுட். ஜடேஜா 12. 20 ஓவர்களில் 177/5. மிட்செல் ஜான்சன் 4 ஓவர்களில் 51 ரன்கள் விளாசப்பட்டார். சாவ்லா, நரைன், குல்தீப் யாதவ் இணைந்து 12 ஒவர்களில் 89 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சென்னை சூப்பர் கிங்ஸ் வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டது சுனில் நரைன்.
கேட்ச்கள் நழுவல், தாக்கமற்ற பந்து வீச்சு... ஷுப்மன் கில், கார்த்திக் அதிரடி
சென்னை சூப்பர் கிங்ஸ் லுங்கி இங்கிடியுடன் பந்து வீச்சைத் தொடங்கியது, ஆனால் கிறிஸ் லின் எதிர்பார்த்தது போலவே புல் ஷாட்டில் ஒரு அரக்க சிக்சரையும் நேராக ஒரு சிக்சரையும் விளாசித் தொடங்கினார், ஆனால் அதே ஓவரில் இங்கிடியிடம் அவுட் ஆனார்.
2வது ஓவர்தான் ஆஸிப் வீச சுனில் நரைன் ஒரு பந்தை கனெக்ட் செய்ய சிக்ஸ். அடுத்த 2 பந்துகளிலும் எளிதான கேட்ச் வாய்ப்பை இந்தியாவின் சிறந்த பீல்டர் ஜடேஜா விட்டார் (அடடே... அப்டியா? தருணம்). அடுத்த இங்கிடி ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார் நரைன். ஜடேஜாவின் கேட்ச்களினால் பாதிக்கப்பட்ட ஆசிப் கூடுதல் வேகத்தில் உத்தப்பாவை தவறு செய்ய வைத்தார்.... அப்பாடா கேட்சை பிடித்தாரே என்ற நிம்மதி அவர் முகத்தில் தெரிந்தது, இங்கிலாந்தில் ஏகப்பட்ட கனவுகளுடன் பங்கஜ் சிங் தன் முதல் டெஸ்ட் வாய்ப்பில் பந்து வீச அலிஸ்டர் குக் எட்ஜை ஜடேஜா தவற விட்டது அன்று அவர் கரியரையே பாதித்தது நினைவிருக்கலாம். பங்கஜ் சிங் கனவுகள் சிதைந்து போனது. 9-10 ஆண்டுகள் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இந்தியவின் சிறந்த பீல்டர் ஜடேஜாவினால் குழிதோண்டி புதைக்கப்பட்டது, ஆனால் இன்று ஜடேஜா ஆடிக் கொண்டிருக்கிறார், பங்கஜ் சிங்கைத்தான் காணோம்.
ஷுப்மன் கில் இறங்கி ஒரு எட்ஜ் பவுண்டரியுடன் வாட்சனை 3 பவுண்டரிகள் விளாசினார். நரைன் ஜடேஜாவை ஒரு சிக்சருடன் 20 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 32 ரன்கள் எடுத்து 7வது ஓவரில் ஜடேஜாவிடமே அவுட் ஆகி வெளியேறினார். (தோனியைப் பாராட்டலாமே... கேட்ச்கள் விட்ட ஜடேஜாவிடமே நரைனை வீழ்த்த பவுலிங் கொடுத்தாரே!! ஐயோ! ஐயோ)
ரின்கு சிங்கை 16 ரன்களில் ஹர்பஜன் வீழ்த்தினார். இதே ஓவரில் தினேஷ் கார்த்திக் இறங்கி ஹர்பஜன் சிங்கை மிக அருமையான ஒரு கட் ஷாட் பவுண்டர் அடித்தார். 13வது ஓவரில் பிராவோ 8 ரன்களைக் கொடுக்க கொல்கத்தா 109/4 என்று இருந்தது. 7 ஓவர்களில் 69 ரன்கள் வெற்றிக்குத் தேவை எனும்போது ஆட்டம் கொஞ்சம் நெருக்கமாகச் செல்லும் என்று நாற்காலியில் முன்னால் நகர்ந்து உட்கார்ந்தால்.. அடுத்த 3 ஓவர்களில் ஷுப்மன் கில்லும், கார்த்திக்கும் 46 ரன்களை விளாசினர்.
குறிப்பாக ஜடேஜா கேட்சை விட்ட ஆசிப் ஓவரில் ஷுப்மன் கில் கடுமை காட்டினார். 2 ஷார்ட் பிட்ச் பந்துகள் ஒன்று புல் ஷாட் சிக்ஸ், மற்றொன்று கட் ஷாட்டில் சிக்ஸ். இதனை கேட்ச் எடுக்க ராயுடு கடும் பிரயத்தனம் செய்தார், பிடித்திருந்தால் விராட் கோலிக்கு ட்ரெண்ட் போல்ட் பிடித்த கேட்சுக்கு அடுத்த சிறந்த கேட்ச் ஆகியிருக்கும், ஆனால் பிடிக்கவில்லை. தினேஷ் கார்த்திக்கும் தன் பங்குக்கு ஒரு சிக்ஸ் விளாச 15வது ஓவரில் 21 ரன்கள். கில் ஜடேஜாவை 2 ரன்களுக்குத் தட்டி விட்டு தன் அபாரமான அரைசதத்தை எடுத்தார்.
13 ஒவர்கள் முடிவில் 109/4 என்ற நிலையிலிருந்து தாக்கமற்ற பந்து வீச்சு ஒருபுறம் தோனியின் களவியூகத்தை பகடிசெய்யும் கார்த்திக் மற்றும் கில் ஆகியோரின் பேட்டிங் மறுபுறமுமாக அமைய அடுத்த 4.4 ஓவர்களில் 71 ரன்களை எடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்சை ஊதியது என்றே கூற வேண்டும்.
தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தும் ஷுப்மன் கில் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 57 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர். ஆட்ட நாயகன் சுனில் நரைன்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
32 mins ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago