ஹர்மன்பிரீத்தின் 2 கோல்களால் அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி | பாரிஸ் ஒலிம்பிக்

By செய்திப்பிரிவு

பாரிஸ்: ஒலிம்பிக்கின் இன்றைய ஆடவருக்கான ஹாக்கி போட்டியில் 2-0 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி. ஹர்மன்பிரீத் சிங்கின் கோலால் இந்த வெற்றி சாத்தியமானது.

செவ்வாய்கிழமை நடைபெற்ற ‘பி’ பிரிவு ஆட்டத்தில் ஆரம்பம் முதலே இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. 11-வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் முதல் கோல் அடித்து உற்சாகமூட்டினார். அடுத்து 19-வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. இதுவரை 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. மூன்று போட்டிகளின் முடிவில் 7 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் 12 அணிகள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் போட்டிகளில் அணிகள் ஒருவொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். மேலும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். காலிறுதி போட்டிகள் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறுகின்றன. அரையிறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 6-ஆம் தேதியிலும், பதக்கச் சுற்று ஆட்டங்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

ஹர்மன்பிரீத் அசத்தல்: நியூஸிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 3-2 வெற்றியில் ஹர்மன்பிரீத்தின் கடைசி நேர பெனால்டி ஷூட்டில் அடித்த கோல் வெற்றிக்கு வித்திட்டது. அர்ஜெண்டினா அணிக்கு எதிராக திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 59-வது நிமிடத்தில் 4-வது பெனால்டி கார்னரில் ஹர்மன்பிரீத் கோல் அடித்து சமன் செய்தார். இன்றைய போட்டியிலும் அவர் அடித்த 2 கோல்கள் வெற்றி வாய்ப்பை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE