கம்பீர் பயிற்சியாளரா... அவர் ‘கோச்’ செய்துள்ளாரா? - ஐயத்துடன் கேள்வி எழுப்பும் ஆன்டி ஃபிளவர்!

By ஆர்.முத்துக்குமார்

“கவுதம் கம்பீருக்கு பயிற்சியாளராக அனுபவம் இருக்கிறதா? அவர் கோச்சா?” என்று ஜிம்பாப்வே முன்னாள் கேப்டனும் முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளருமான ஆண்டி பிளவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2018-ல் ஓய்வு பெற்றதிலிருந்து அவர் பணியாற்றிய இரண்டு ஐபிஎல் அணிகளில் பயிற்சி குழுவில் ஒருவராக இருந்தாரே தவிர, தனது காலத்தில் முறையான பயிற்சி பதவியை பெற்றதில்லை. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸில் அவர் 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு சீசன்களுக்கு மென்ட்டாராக இருந்தார். 2024 கேகேஆர் அணியிலும் அவர் நம்பிக்கை அறிவுரையாளராக இருந்தாரே தவிர முறையான அனுபவம் பெற்ற சான்றிதழ் பெற்ற பயிற்சியாளராக இருந்ததில்லை என்பதுதான் இப்போது பிரச்சினை.

பயிற்சியாளருக்கே உரிய எந்தப் பணியையும் கம்பீர் முன்பு மேற்கொண்டதில்லை, அதாவது பயிற்சி அமர்வுகள் எப்படி நடத்தப்பட வேண்டும், வீரரின் பேட்டிங் அல்லது பவுலிங் உத்தியில் தேவைப்படும் மாற்றத்தைச் செய்தல் போட்டிக்கு முன்பான திட்டமிடல் என்று எதையாவது கம்பீர் செய்திருக்கிறாரா என்பதற்கான வெளிப்புற அடையாளங்களும் ஏதுமில்லை. இதே கேள்விகளுடன் ஆன்டி ஃபிளவர் பேசும்போது, “கம்பீர் ஒரு உற்சாகமூட்டும் உத்வேகமளிக்கும் தலைவராக இருப்பது தான் சிறந்தது. இது தான் அவருக்குத் துல்லியமான பணி. மற்றவர்கள் கம்பீர் வழியைப் பின்பற்றத்தக்க, பின்பற்ற விரும்பும் சில நம்பிக்கைகள், கொள்கைகள், நடைமுறைகள் கம்பீர் இடத்தில் இருக்கலாம்.

தங்கள் தலைவர் அவருடைய முடிவுகளின் மேல் தைரியமாகவும் உறுதியாகவும் இருக்கிறார் என்பதை அவரைப் பின்பற்றுபவர்கள், அணிகள் நம்பிக்கை கொள்ளலாம். கம்பீரிடம் இத்தகைய குணாம்சம் உள்ளது. அவரிடம் வலுவான கருத்துகள் உள்ளன. எங்கு செல்ல வேண்டும் என்பதில் அவருக்குத் தெளிவு இருக்கலாம். கடினமான முடிவுகளை எடுப்பதில் தைரியம் காட்டுபவராக இருக்கலாம். தன் அணி என்ன மாதிரியான கிரிக்கெட்டை ஆட வேண்டும் என்பதில் அவருக்கு தெளிவான சிந்தனைகள் இருக்கலாம்.

தனியார் கிரிக்கெட்டுக்கும் சர்வதேச கிரிக்கெட்டுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. சர்வதேச அரங்கில் வீரர்களையோ அணியையோ நீண்ட கால அடிப்படையில் தொலைநோக்குடன் உருவாக்க வேண்டும். தனியார் கிரிக்கெட் குறுகிய காலத் திட்டங்களைக் கொண்டது. மாறாக தேசிய அணியைக் கட்டமைப்பது என்பது அணியில் ஒரு விதமான பண்பாட்டையும் பிணைப்பையும் ஏற்படுத்துவது. மூன்று வடிவங்களுக்கும் மூன்று கேப்டன்கள் இருக்கலாம். மூன்று அனுபவ வீரர்கள், அனுபவமற்ற வீரர்கள் இருக்கலாம். ஆனால் அணியின் நோக்கம் பண்பாடு ஒன்றே என்பதைக் கட்டமைக்க வேண்டும்.

கம்பீரால் எல்லாவற்றையும் செய்ய முடியாது. அவருக்கு உதவி பயிற்சியாளர்கள் தேவை. முஷ்டாக் அகமது கூறுவார் தலைமைப் பயிற்சியாளர் தந்தை போன்ற கண்டிப்புடனும், உதவி பயிற்சியாளர் தாய் போன்ற அரவணைப்புடனும் செயல்பட வேண்டும்” என்று கூறுவார். அது சரியானதுதான்” என்றார் ஆன்டி பிளவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE