AIN என்றால் என்ன? - ​​​பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்யா, பெலாரஸ் வீரர்கள் பங்கேற்பதன் பின்புலம் | HTT Explainer

By செய்திப்பிரிவு

பாரிஸ்: உலக நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளனர். இதில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை தவிர்த்து பெரும்பாலான வீரர்கள் தங்களது நாட்டின் சார்பாக பங்கேற்றுள்ளனர். ரஷ்யா மற்றும் பெலாரஸ் தனிநபர் நடுநிலை விளையாட்டு வீரர்களாக இதில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் AIN (Individual Neutral Athletes) என அறியப்படுகின்றனர்.

உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகள் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) தடை உத்தரவு பிறப்பித்தது. இதனை பல்வேறு உலக நாடுகள் வரவேற்றுள்ளன. உக்ரைன் போரால் சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான தடையை ரஷ்யா எதிர்கொண்டு வருகிறது. அது தற்போது ஒலிம்பிக் களத்திலும் நீண்டுள்ளது.

அதனால் பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க விரும்பினால் தங்கள் நாட்டை சாராமல் தனிநபராக பங்கேற்று விளையாட வேண்டும். அதன்படி தற்போது இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் வெற்றி பெற்றால் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்படாது. மேலும், அதன் கொடிகளும் பயன்படுத்தப்படாது. தனி கொடி மற்றும் நடுநிலை வீரர்கள் சார்ந்த பாடல் ஒலிக்கப்படும். ஏஐஎன் என்பது பிரெஞ்சு சொற்றொடரின் சுருக்கம். ஆங்கிலத்தில் இது Individual Neutral Athletes என சொல்லப்படுகிறது.

தடைக்கான காரணம் என்ன? சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒப்பந்தத்தின் படி சர்வதேச நாடுகள் ஒலிம்பிக் போட்டிகள் அதாவது கோடைகால ஒலிம்பிக், குளிர்கால ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு வார காலம் முன்னரும், பின்னரும் போர் சார்ந்த செயல்களில் ஈடுபடக் கூடாது. ஆனால், உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யா படையெடுத்தது. அதுவும் அந்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் நிறைவடைந்த கையோடு ரஷ்யா அதனை செய்திருந்தது. ரஷ்ய படையை தங்களது நாட்டுக்குள் பெலாரஸ் அனுமதித்தது. ஒலிம்பிக் கமிட்டியின் ஒப்பந்தம் மீறப்பட்ட காரணத்துக்காக பிப்ரவரி 2022-ல் ரஷ்யா மற்றும் பெலராஸ் நாடுகள் ஒலிம்பிக்கில் பங்கேற்க ஐஓசி தடை விதித்தது.

கடந்த 2023-ல் உக்ரைன் நாட்டின் சில பகுதிகளில் உள்ள விளையாட்டு சார்ந்த அமைப்பு ரீதியிலான அதிகாரம் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக ரஷ்யா அறிவித்தது. ஆனால், இந்த பகுதிகள் உக்ரைன் தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஐஓசி தெரிவித்தது. மேலும், ரஷ்யாவின் ஒப்பந்த விதிமீறல் குறித்தும் அப்போது ஐஓசி குறிப்பிட்டு இருந்தது.

ரஷ்ய, பெலாரஸ் வீரர்களுக்கு வாய்ப்பு: ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகள் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதித்த போதிலும், அது அந்த நாடுகளைச் சேர்ந்த விளையாயட்டு வீரர்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என ஐஓசி விரும்பியது. அதற்கான வழியை வகுத்தது.

ஆனால், இது கொஞ்சம் கடினமானது என்கிறார் ஒலிம்பிக்கில் பங்கேற்றவரும், பேராசிரியருமான ஜூல்ஸ் பாய்காஃப். ஏனெனில், உலக தடகள அமைப்பு ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது. அந்த காரணத்தால் அவர்களால் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக தகுதியை ரஷ்யா மற்றும் பெலாரஸ் தடகள வீரர்கள் பெற முடியாது. இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இல்லை என ஐஓசி தெரிவித்துள்ளது.

ஆனால், கடந்த காலங்களில் அரசியல் நோக்கத்துடன் ஒலிம்பிக் கமிட்டி செயல்பட்டுள்ளதாக சொல்கிறார் டெக்சாஸ் ஆஸ்டின் பல்கலைக்கழக பேராசிரியர் ஜான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஊக்க மருந்து தொடர்பாக அறிக்கையில் முறைகேடு செய்தி காரணத்தால் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி என்ற பெயரில் டோக்கியோ ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் ‘ஏஐஎன்’ பிரிவில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த 32 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ரஷ்யா சார்பில் மூன்று சைக்கிள் பந்தயம், டிராம்போலைன், டேக்குவாண்டோ, பளு தூக்குதல், மல்யுத்தம், படகு வலித்தல், துப்பாக்கிச் சுடுதல், டென்னிஸ், நீச்சல் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யாவின் டேனில் மெத்வதேவும் பங்கேற்றுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE