ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றார் மனு பாகர்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி, தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இந்தியா தனது முதல்பதக்கத்தை வென்றுள்ளது. இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்று சாதனைபடைத்துளளார். அவருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில்33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளை சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்று 2-வது நாள் போட்டியின்போது மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல்பிரிவு போட்டிகள் நடைபெற்றன. முன்னதாக, நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர்ஏர் பிஸ்டல் மகளிர் தகுதி சுற்றில்இந்திய வீராங்கனைகள் ரிதம் சங்க்வான், மனு பாகர் பங்கேற்றனர். இதில் ரிதம் சங்க்வான் 15-வது இடத்தை பிடித்து வெளியேறினார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த மனு பாகர், மொத்தம் உள்ள6 சுற்றுகளில் 600-க்கு 580 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்திருந்தார். இதன்மூலம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

நேற்று நடந்த இறுதி போட்டியில் மனு பாகர் 221.7 புள்ளிகள் குவித்து 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். கொரிய வீராங்கனை ஓ யே ஜின் 243.2 என்ற புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், மற்றொரு கொரிய வீராங்கனை கிம் யெஜி 241.3 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கமும் வென்றனர்.

இப்போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாகர் வெண்கலம் வென்றதை தொடர்ந்து, பதக்கபட்டியலில் இந்தியா இடம்பெற்றது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது. அதேபோல, ஒலிம்பிக்கில் ஏர் பிஸ்டல் பிரிவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் (2004) வெள்ளியும்,அபிநவ் பிந்த்ரா (2008) தங்கமும்,ககன் நரங் (2012) வெண்கலமும், விஜய்குமார் (2012) வெள்ளியும் வென்ற நிலையில், வீராங்கனை பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை.

பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாகருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘இது வரலாற்றுப் பதக்கம். வெல்டன், மனு பாகர்!பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கமாக வெண்கலம் வென்றதற்கு வாழ்த்துகள். இந்தியாவுக்காக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்றமுதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதால், இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்திய வீரர் அபிநவ் பிந்த்ரா உள்ளிட்டோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

‘பகவத்கீதையை அதிகம் படித்தேன்’ - வெண்கல பதக்கம் வென்ற பிறகு, பாரிஸில் செய்தியாளர்களிடம் வீராங்கனை மனு பாகர் கூறியதாவது:

கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் நான் பங்கேற்ற 3 பிரிவு போட்டிகளிலும் தவறு ஏற்பட்டதால் மனமுடைந்தேன். பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா என்னை தேற்றினார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவேண்டும் என்ற எனது கனவை தற்போது நிறைவேற்றிவிட்டேன். ‘இந்த போட்டியில் என்ன செய்ய வேண்டும் என நினைத்தாயோ, தாய்நாட்டுக்காக அதை செய்துவிடு’ என்று எனக்குள் கூறிக்கொண்டே இருந்தேன். அதுதான் எனக்கு உத்வேகமாக இருந்தது.

பகவத் கீதையை அதிகமாக படித்துள்ளேன். நீங்கள் எதற்காக வந்துள்ளீர்களோ, அதை செய்யுங்கள் என்று கீதைகூறுகிறது. அதைத்தான் கீதையில் அர்ஜுனனிடம் கிருஷ்ணர் சொன்னார். நான் அதை நம்புகிறேன். இந்த பதக்கம் இந்தியர்கள் அனைவருக்குமானது. தாய்நாட்டுக்காக பதக்கம் வென்றதில் மிகவும் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE