“இந்தியாவுக்கு பெருமை” - ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மனு பாகருக்கு பிரதமர் மோடி போனில் வாழ்த்து 

By செய்திப்பிரிவு

பாரிஸ்: ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாகருக்கு பிரதமர் நரேந்திர மோடி போனில் வாழ்த்து தெரிவித்தார்.

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த ஜூலை 26ல் கோலாகலமாக தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனைகள் ரிதம் சங்க்வான், மனு பாகர் பங்கேற்றனர்.

இதில் மொத்தம் உள்ள 6 சுற்றுகளில் 600-க்கு 580 புள்ளிகள் பெற்று மனு பாகர் 3-வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற அவர், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.

இந்த நிலையில், மனு பாகரின் இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அவரை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்திய வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் மனு பாகரிடம் பிரதமர் மோடி போனில் பேசியதாவது: “மனமார்ந்த வாழ்த்துக்கள் மனு. உங்கள் வெற்றிச் செய்தியைக் கேட்டவுடன், நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெள்ளிப் பதக்கத்தைத் தவறவிட்டீர்கள், ஆனாலும் நீங்கள் இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தி விட்டீர்கள். நீங்கள் இரண்டு சாதனைகளை படைத்திருக்கிறீர்கள். வெண்கலம் வென்றது மட்டுமின்றி, ஏர் பிஸ்டல் பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் நீங்கள்தான்.

நான் உங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். டோக்கியோ ஒலிம்பிக்கின் போது உங்கள் துப்பாக்கி உங்களை ஏமாற்றி விட்டது. எனினும் இந்த முறை நீங்கள் எல்லாவற்றையும் சிறப்பாக செய்தீர்கள்.

இனிவரும் நிகழ்வுகளில் நீங்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆரம்பம் நன்றாக இருந்தால், அது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும், அது நாட்டை மேலும் பெருமைப்படுத்தும்” இவ்வாறு பிரதமர் மோடி மனு பாகரிடம் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE