மனு பாகர் சாதனை: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்றதன் பின்னால்... | HTT Explainer

By எல்லுச்சாமி கார்த்திக்

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார் மனு பாகர். துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்திய மக்களின் கனவை மனு நிஜமாக்கியுள்ளார். அவர் குறித்து பார்ப்போம்.

22 வயதான அவருக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் கிடைத்த அனுபவம் மோசமானதாக அமைந்தது. நம் ஊர் தமிழ் சினிமாக்களில் வருவது போல போட்டியின்போது அவரது துப்பாக்கியில் கோளாறு ஏற்பட்டது. அதன் காரணமாக அவரால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது. இந்த முறை விட்டதை பிடிக்கும் முனைப்போடு களம் கண்ட அவர், அதில் வாகையும் சூடியுள்ளார். ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக்கில் இது ஓர் அற்புத கம்பேக்.

மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல், மகளிர் 25 மீட்டர் பிஸ்டல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி என மூன்று பிரிவுகளில் பாரிஸ் ஒலிம்பிக்கில் மனு விளையாடுகிறார். இதில் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் வெண்கலம் வென்றுள்ளார். ஏனெனில், அவருக்கு தன்னம்பிக்கை மிகவும் அதிகம். இந்திய அணிக்கான ஒலிம்பிக் ட்ரையல் நடந்த சமயத்தில் தனது சகோதரர் தந்த வயலினை அவர் வாசித்து பழகியுள்ளார். அதே நேரத்தில் ஒலிம்பிக் ட்ரையலில் 10 மற்றும் 25 மீட்டர் பிஸ்டல் ஈவென்டில் முதலிடம் பிடித்ததும் அவர் தான்.

இத்தனைக்கும் 16 வயதுக்கு முன்னர் வரை அவர் பயிற்சி பெற்றது வேறு சில விளையாட்டுகளில் தான். குத்துச்சண்டை தனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு என அவரே நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். செய்ததை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய சலிப்பு காரணமாக அந்த விளையாட்டில் இருந்து விலகி உள்ளார்.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளம் வயது இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு படைத்தவர். அதன் மூலமாக அவர் லைம் லைட்டுக்குள் வந்தார். தொடர்ந்து 16 வயதில் காமன்வெல்த் பதக்கம், 17 வயதில் ஒலிம்பிக் கோட்டா, 19 வயதில் முதல் ஒலிம்பிக் என மனுவின் பயணம் இருந்தது. இருந்தபோதும் டோக்கியோ ஒலிம்பிக்கில் அவரது செயல்பாடு எதிர்பார்த்த வகையில் இல்லை. பயிற்சியாளர் ஜஸ்பல் ராணாவுடன் ஏற்பட்ட கருத்து முரண் அதற்கு ஒரு காரணமாக அமைந்தது.

“டோக்கியோ எனது முதல் ஒலிம்பிக் அனுபவம். ஒலிம்பிக்கின் சிறப்பு குறித்து நான் அறிந்துள்ளேன். ஆனால், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போன்ற போட்டிகளில் நான் உணராத பதற்றத்தை அதில் அறிந்தேன். டோக்கியோவின் கசப்பான அனுபவம் சார்ந்து நான் யோசித்தது உண்டு. அதற்கான காரணம் குறித்து நான் அறிய முயன்றேன். ஆனாலும், கடந்த காலத்தை மாற்ற முடியாது. அதன் காரணமாக அடுத்து என்ன என்பதில் எனது கவனம் இருந்தது.

அதோடு பயிற்சியாளர் ஜஸ்பல் ராணா சார் உடன் நான் மீண்டும் இணைந்து பயிற்சி மேற்கொள்ள முடிவு செய்தேன். அதை செய்தேன். அவர் எனக்கு பாசிட்டிவ் எனர்ஜி வழங்குகிறார். அதை நான் உணர்ந்தேன். மேலும், எனது துப்பாக்கியை ஆறு மாதத்துக்கு ஒரு முறை அவர் சுத்தம் செய்கிறார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகும் எனது துப்பாக்கியில் கோளாறு இருந்தது. புதிய துப்பாக்கியை பயன்படுத்தியும் அதை எதிர்கொண்டேன். ஆனால், இப்போது அது இல்லை. அதற்கு காரணம் ஜஸ்பல் சார்தான்.

அதோடு இரண்டு முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற இளம் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நான் படைக்க விரும்பவில்லை. பதக்கம் வெல்ல விரும்புகிறேன். டோக்கியோ அனுபவம் நல்ல பாடங்களை தந்துள்ளது. இந்த முறை அனைத்தும் மாறும்” என பாரிஸ் ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்பாக மனு தெரிவித்திருந்தார். தற்போது தனது சொல்லை மெய்ப்பித்துள்ளார். அவர் ஹரியாணா மாநிலத்தை சேர்ந்தவர்.

“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. நான் சிறப்பாக உணர்கிறேன். இது இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய பதக்கம். நான் அதை செய்துள்ளேன். இந்தியா மேலும் பல பதக்கங்களை வெல்லும். அதற்கான தகுதி நம்மிடம் உள்ளது. நான் கடினமாக பயிற்சி செய்தேன். கடைசி வரை முழுமையாக போராடினேன். இந்த முறை வெண்கலம். அடுத்த முறை இன்னும் பெட்டராக இருக்கும்” என ஒலிம்பிக் வெண்கல பதக்கம் வென்றதும் மனு தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்