‘‘இம்முறை இந்தியா அதிக பதக்கங்களை வெல்லும்’’ - வெண்கலம் வென்ற மனு பாகர் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

பாரிஸ்: "இந்தியா இன்னும் அதிகமான பதக்கங்களுக்குத் தகுதியானது. இந்த முறை இந்தியா அதிக பதக்கங்களை வெல்லும் என எதிர்நோக்குகிறோம்." என்று பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாகர் தெரிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாகர் வெண்கல பதக்கம் வென்றார்.

கொரியாவின் ஓ யே ஜின் 243.2 என்ற புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார். அதே கொரியாவை சேர்ந்த மற்றொரு வீராங்கனையான கிம் யெஜி 241.3 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கததை வென்றார். மனு பாகர் 221.7 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார். இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கம் வென்றது. அதேபோல், ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற சாதனையையும் மனு பாகர் படைத்தார்.

ஏர் பிஸ்டல் பிரிவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு கிடைத்துள்ள பதக்கம் இதுவாகும். கடைசியாக 2012 லண்டன் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்த மனு பாகர், பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கத்தை வசப்படுத்தியுள்ளார்.

வெற்றிக்கு பிறகு பேசிய மனு பாகர், "துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு நீண்டகாலத்துக்குப் பிறகு கிடைத்த பதக்கம் இது. இதனை சாத்தியப்படுத்த நான் ஒரு கருவியாக இருந்தேன். இந்தியா இன்னும் அதிகமான பதக்கங்களுக்குத் தகுதியானது. இந்த முறை அதிக பதக்கங்களை இந்தியா வெல்லும் என எதிர்நோக்குகிறோம். தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை கனவில் இருப்பதை போன்ற உணர்வு உள்ளது. நான் நிறைய முயற்சி செய்தேன். கடைசி ஷாட் வரை கூட எனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி போராடினேன். வெண்கலம் கிடைத்தது. அடுத்த முறை சிறப்பாக அமையும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE